கைதான 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி


கைதான 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 10 Nov 2022 7:30 PM GMT (Updated: 10 Nov 2022 7:30 PM GMT)

ரவுடி கடத்தல் வழக்கில் கைதான கூலிப்படையை சேர்ந்த 5 பேரை 2 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

சேலம்

ரவுடி கடத்தல் வழக்கில் கைதான கூலிப்படையை சேர்ந்த 5 பேரை 2 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

ரவுடி கடத்தல் வழக்கு

சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி பூபதி. இவரை கடந்த வாரம் 10 பேர் கொண்ட கும்பல் கடத்தியது. இதுகுறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரவுடியை மீட்டனர். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின்பேரில் சேலத்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஏகாம்பரம், கடையின் மேலாளர் பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ஏகாம்பரம் கூலிப்படையை ஏவி, ரவுடி பூபதியை கடத்தியது தெரியவந்தது. தனது சொத்துகளை விற்பனை செய்து தருவதாக கூறி ஏமாற்றியதுடன் சொத்து பத்திரங்களை பறித்து சென்ற கோபத்தில் ஏகாம்பரம் கூலிப்படையை அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.

5 பேர் கைது

இந்த நிலையில், சூரமங்கலம் பகுதியில் வாலிபர் ஒருவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் பிரபாகரன், யுவராஜ், நவீன்குமார், கவுதம், மணிமாறன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு ரவுடி பூபதியை கடத்தி சென்ற வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரவுடி பூபதி கடத்தல் வழக்கில் அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சிறையில் அடைக்கப்பட்ட 5 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தார்.

காவலில் எடுத்து விசாரணை

இதனிடையே, கூலிப்படையை சேர்ந்த 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அழகாபுரம் போலீசார் சேலம் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவை நேற்று விசாரித்த மாஜிஸ்திரேட்டு, ரவுடி கடத்தல் வழக்கு தொடர்பாக 5 பேரையும், 2 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார். இதையடுத்து அவர்களை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story