கல்லூரி மாணவி சத்யபிரியாவை கொலை செய்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் - விஜயகாந்த்


கல்லூரி மாணவி சத்யபிரியாவை கொலை செய்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் - விஜயகாந்த்
x

கல்லூரி மாணவி சத்யபிரியாவை கொலை செய்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியா என்ற கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகள் இறந்த துக்கத்தில் தந்தையும் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

2016ல் சுவாதி, 2021ல் சுவேதா, தற்போது சத்யபிரியா என ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவிகள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. ஒரு தலையாக காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் நடந்தால் ஆத்திரத்தில் அப்பெண்ணை கொலை செய்வது என்பது எந்தவிதத்தில் நியாயம். இனிமேல் காதல் விவகாரத்தில் பெண் பிள்ளைகளும் மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

ஒரு தலை காதலால் யாரிடமும் இருந்து கொலை மிரட்டல்கள் வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் தங்கள் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்பதை பெண் பிள்ளைகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கல்லூரி மாணவி சத்யபிரியாவை கொடூரமாக கொலை செய்த இளைஞர் சதீஷ்க்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற துயரமான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும். கல்லூரி மாணவிகள் சுவாதி, சுவேதா, சத்யபிரியா ஆகிய மூன்று பேரும் ரயில் நிலையங்களில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதால் ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, ரயில் நிலையங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மாணவி சத்யபிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

என்று கூறியுள்ளார்.


Next Story