தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு கலாசாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்


தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு கலாசாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
x

தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு கலாசாரத்துக்கு முடிவு கட்டவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

கோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது கடந்த 22-ந் தேதி பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு தொடங்கிய பெட்ரோல் குண்டுவீச்சு நிகழ்வு திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சேலம், கன்னியாகுமரி உள்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு பரவியிருக்கிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்றுவரும் பெட்ரோல் குண்டுவீச்சு நிகழ்வுகள் தமிழகத்தில் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளன.தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான இந்த வன்முறை நிகழ்வுகள் கட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு மாறாக, பிற பகுதிகளுக்கு பரவிவருவது மிகுந்த கவலை அளிக்கிறது. தமிழகத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று இது அமைதிப்பூங்கா என்பதுதான். இந்திய விடுதலைக்கு முன்பும், பின்பும் இங்கு ஆட்சி செய்த அனைத்து முதல்-அமைச்சர்களும் தமிழகத்தை அமைதிப்பூங்காவாக பராமரித்ததை தங்களின் சாதனைகளில் ஒன்றாக குறிப்பிட்டு வந்துள்ளனர்.

சட்டம்-ஒழுங்கு

தமிழகத்தின் அந்த பெருமைக்கு பெட்ரோல் குண்டுவீச்சு நிகழ்வுகள் குந்தகத்தை ஏற்படுத்திவிடக்கூடாது. பெட்ரோல் குண்டுவீச்சு கலாசாரத்துக்கு முடிவு கட்டப்பட வேண்டும். தமிழ்நாட்டில் சமீபத்தில் 20-க்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டுவீச்சு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவற்றின் கண்காணிப்பு கேமரா காட்சிகளும் வெளியாகியுள்ளன. இவ்வளவுக்கு பிறகும் ஓரிருவரைத் தவிர, பெட்ரோல் குண்டு குற்றவாளிகள் கைது செய்யப்படாதது கவலை அளிக்கிறது.

பெட்ரோல் குண்டுவீச்சில் ஈடுபடுவோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த அறிவிப்பு மட்டுமே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துவிடாது. கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாட்டின் அமைதி, வளர்ச்சி, தொழில் முதலீடுகளை ஈர்த்தல் உள்ளிட்ட அனைத்துக்கும் சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்படவேண்டியது அவசியம். இதை கருத்தில் கொண்டு பெட்ரோல் குண்டுவீச்சு கலாசாரத்துக்கு தமிழக அரசு விரைந்து முடிவு கட்டவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரவி பச்சமுத்து

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீதும், பா.ஜ.க.வினர் மீதும் சமூகவிரோதிகளால் நடத்தப்பட்டுவரும் வன்முறை மிகவும் கண்டிக்கத்தக்கது. அமைதிப்பூங்காவான தமிழகத்தில் இதுபோல நடக்கும் வன்முறை எந்த மதத்தினரானாலும், எந்த கட்சியாலும் நடந்தாலும் அதை இந்திய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதை தமிழக அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story