தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் - ஜி.கே.வாசன்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து, பொன்விழாவை கொண்டாடி வருகிறது. இந்நிலையில் அரசுக்கு சொந்தமான 21 நவீன அரிசி ஆலையில் இருந்து 12 நவீன அரசி ஆலைகள் தனியார்மயமாக்கப்படும் என்ற செய்தி வெளிவந்துள்ளது.
மக்களின் நேரடி தொடர்பில் இருக்கும் நுகர்பொருள் வாணிபக்கழகம் தற்பொழுது தனியார்மயம் ஆக்கப்படும் என்ற செய்தி, மக்களிடையேயும், இந்நிறுவன தொழிலாளர்களிடையேயும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பொது மக்களுக்கு நேரடியாக சேவை செய்து வரும் நுகர்பொருள் வாணிப கழகம் தனியார்மயமானால் நிர்வாக சிக்கலும், சீர்கேடும் நடைபெற மிகுந்த வாய்ப்புள்ளது. எனவே , தனியார்மயமாக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.