2 புள்ளிமான்கள் இறந்தன.


2 புள்ளிமான்கள் இறந்தன.
x

டி.கல்லுப்பட்டி அருகே 2 புள்ளிமான்கள் இறந்தன.

மதுரை

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி அருகே 2 புள்ளிமான்கள் இறந்தன.

தண்ணீர் தேடி வரும் மான்கள்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வனப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. இந்த புள்ளி மான்கள் கோடை காலத்தில் தண்ணீர் தேடியும், உணவு தேடியும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம பகுதிகளுக்கு அடிக்கடி புகுந்து விடுவது வழக்கம். இவ்வாறு உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் புள்ளிமான்களை தெருநாய்கள் துரத்தி கடிக்கின்றன. இதில் புள்ளிமான்கள் இறக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கிறது.

அதேபோல் மான்கள் சாலையை கடக்கும்போது அவ்வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் மோதியும் அவை இறக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

2 புள்ளிமான்கள் சாவு

இந்நிலையில் டி.கல்லுப்பட்டி அருகே திருமங்கலம்-ராஜபாளையம் சாலையில் உள்ள ஏ.பாரைப்பட்டி அருகில் 2 வயது கொண்ட ஆண் புள்ளிமான் ஒன்று அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றது. அந்நேரம் அவ்வழியாக வந்த வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.

இதேபோல் பேரையூர் அருகே உள்ள பழையூரில் தண்ணீர் தேடி 2 வயது பெண் மான் ஒன்று ஊருக்குள் புகுந்தது. அதனை பார்த்த தெரு நாய்கள் துரத்தி, துரத்தி கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த அந்த புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. இந்த 2 சம்பவங்கள் குறித்து அறிந்த சாப்டூர் வனத்துறையினர் அங்கு சென்று மான்களின் உடல்களை மீட்டு பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.


Next Story