செத்த கோழிகளை சாலையோரங்களில் கொட்டுவதால் நோய் பரவும் அபாயம்


செத்த கோழிகளை சாலையோரங்களில் கொட்டுவதால் நோய் பரவும் அபாயம்
x

சாலையோரங்களில் செத்த கோழிகளை கொட்டுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்

மூலனூர்

மூலனூர்-சின்னக்காம்பட்டி சாலையோரங்களில் செத்த கோழிகளை கொட்டுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கறிக்கோழி வளர்ப்பு ெதாழில்

திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சி பகுதியில் முக்கிய தொழில்களில் ஒன்று கறிக்கோழி வளர்த்தல் ஆகும். மூலனூர் சின்னக்காம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்நிலையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாகவும், பண்ணைகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விடுவதாலும் மற்றும் கோழிகளுக்கு கொடுக்கும் தீவனங்களின் கலவைகள் அதிகமாகவோ, குறைவாகவோ கொடுத்து விடுவதாலும் கோழிகளுக்கு அதிக அளவில் வயிற்றுப்போக்கு உண்டாகிறது.

அதை விவசாயிகள் சரி வர கவனிக்காத காரணத்தினாலும் பண்ணையில் வளரும் கோழிகள் அதிக அளவில் இறந்து விடுகின்றன. குறிப்பாக மழைக்காலங்களில் இவற்றின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

நோய் பரவும் அபாயம்

இவ்வாறு இறக்கின்ற கோழிகளை விவசாயிகள் சாக்கு மூட்டைகளில் கட்டி சாலையோரங்களில் போட்டு விடுகின்றனர். சில நேரங்களில் திறந்தவெளியில் கொட்டி விடுகின்றனர். இதனால் இரண்டு மூன்று நாட்களில் கோழிகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதியில் உள்ள நாய்கள், காக்கைகள் சாக்கு மூட்டைகளை கடித்து குதறுவதால் அழுகிய கோழிகள் ரோட்டில் சிதைந்து கிடக்கின்றன. இதனால் கொசுக்கள் ஈ தொல்லைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகின்றது.

மேலும் காக்கைகள் இந்த அழுகிய இறைச்சி துண்டுகளை தூக்கி கொண்டு போய் தோட்டங்களில் கால்நடைகளுக்கு வைத்திருக்கும் தண்ணீர் தொட்டிகளில் போட்டு விடுவதால் இந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இறந்த கோழிகளை சாப்பிட்டு பழகிய நாய்கள் கோழிகள் கிடைக்கவில்லை என்றால் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை கடிக்க தொடங்கி விடுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைகின்றனர்.

இது பற்றி இப்பகுதி மக்கள் கூறுகையில்:-

நடவடிக்கை எடுக்க ேகரிக்கை

கோழி பண்ணை விவசாயிகள் செத்த கோழிகளை சாக்கு மூட்டைகளில் கட்டி சாலையோரங்களில் போடுவதால் துர்நாற்றம் அதிகமாகி சுகாதார சீர்கேடால் கொசு உற்பத்தி அதிகமாகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் நோய் பரவும் நிலை ஏற்படுகிறது.

இது பற்றி பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை, தற்போது மூலனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story