'தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுகிறது'


தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுகிறது
x

சினிமா தியேட்டர்கள் ஏழை, எளிய மக்களின் பொழுதுபோக்கு அரங்கம் என்று சொல்லப்படுவது உண்டு. ஆணும், பெண்ணும் குழந்தையும் குட்டியுமாக கிளம்பி திருவிழாவிற்கு போவது போல் தியேட்டர்களுக்கு போவார்கள். இப்போது அந்த ஆர்வமும், ஆசையும் இருந்தாலும்கூட அந்த மக்களால் சினிமா தியேட்டர்களுக்கு போகமுடியுமா? என்று கேட்டால், முடியாது என்றே சொல்ல தோன்றுகிறது.

பெரம்பலூர்

மயக்கம் தரும் விலை

அந்த அளவில் தியேட்டர்கள் சாதாரண, சாமன்ய மக்களின் பட்ஜெட்டுக்கு உகந்ததாக இல்லை. டிக்கெட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், அங்கு உள்ள கேன்டீன்களில் விற்கப்படும் உணவுப் பண்டங்களின் விலைகளை கேட்டால் மயக்கம் போட்டுதான் விழ வேண்டும்.

10 ரூபாய், 20 ரூபாய்க்குக்கூட தகுதி இல்லாத வெறும் மக்காச்சோளப் பொரிக்கு (பாப்கார்ன்) ரூ.60 முதல் ரூ.160 வரை! காபி, டீயா? 30 ரூபாய்! இது சாதாரணத் தியேட்டர்களில். மால்களில் இயங்கும் தியேட்டர்களில் இன்னும் பல மடங்கு அதிகம். பாப்கான் ரூ.400 வரை விற்கிறார்கள். நாம் கொண்டுபோகும் தின்பண்டங்களையும் அனுமதிக்க மாட்டார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் டிக்கெட் கட்டணத்தைவிட தின்பண்டங்கள் விலைகளே திகைக்க வைக்கின்றன.

இதனால் தியேட்டருக்கு குடும்பத்தோடு சினிமாவுக்கு போகவேண்டும் என்ற ஆசை அடியோடு அற்றுப்போகிறது.

என்ன நியாயம்?

இதுபற்றி விசாரித்தால், ''தியேட்டர் பராமரிப்பு செலவு அதிகமாகிறது. டிக்கெட் கட்டணம் அரசு நிர்ணயிப்பதால் அதை உயர்த்த முடியவில்லை. தின்பண்டங்களின் விலைகளை அதிகமாக வைத்திருக்கிறோம். யாரையும் கட்டாயப்படுத்தி தின்பண்டங்கள் வாங்கச் சொல்வது இல்லை'' என்கிறார்கள்.

நாம் கொண்டுபோகும் தின்பண்டங்களை பிடுங்கிவைத்துக் கொண்டு இவ்வாறு சொல்வது என்ன நியாயமோ? தெரியவில்லை.

சினிமா தொழிலுக்கு மூலதனமே அதைப் பார்க்கவரும் ரசிகர்கள்தான் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் ஆதங்கங்கள், கருத்துகள் வருமாறு:-

குடிநீரை குடித்து...

பெரம்பலூரை சேர்ந்த ரமேஷ் விஷால்:- தியேட்டர்களில் கேண்டீன்களில் தின்பண்டங்களின் விலை உயர்வாக இருப்பதை தெரிந்தே நாம் பலரும் வாங்கி சாப்பிடுகிறோம். அது தேவையா? தேவை இல்லையா? என்பதை அவரவர் தான் முடிவு எடுக்க வேண்டும். ஒரு குடும்பத்தினர் சினிமா தியேட்டருக்கு சென்றால் தின்பண்டங்களுக்கு ஒரு தொகை ஒதுக்க வேண்டிய உள்ளது. இதனால் சிலர் இடைவெளியில் தின்பண்டங்கள் வாங்காமலேயே குடிநீரை குடித்து விட்டு மீதி படத்தை பார்க்க செல்கின்றனர். தின்பண்டங்களின் விலையை சற்று குறைத்தால் அனைத்து தரப்பினரும் தின்பண்டங்களை வாங்குவார்கள்.

பெற்றோர் அவதி

எளம்பலூரை சேர்ந்த சுவாதி:- சினிமா திரையரங்குகளில் குடும்பத்துடன் படம் பார்க்க செல்வதற்கே மிகவும் பயமாக உள்ளது. டிக்கெட் விலையை விட உள்ளே விற்கும் தின்பண்டங்களின் விலை அதிகமாக உள்ளது. குழந்தைகளை சினிமா பார்க்க அழைத்து செல்லும் பொழுது திரையரங்கு கேண்டின்களில் அவர்கள் கேட்கும் தின்பண்டங்களை வாங்க முடியாமல் பல பெற்றோர் அவதியடைந்து வருவதை கண்கூடாக பார்த்து உள்ளேன். வெளியில் இருந்து வாங்கி கொண்டு செல்லும் தின்பண்டங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. காரணம் கேட்டால் ஏ.சி. தியேட்டர்களில் இருக்கைகள் மற்றும் சுற்றுப்புறங்கள் சுகாதாரமாக மக்கள் வைத்திருப்பதில்லை என்று கூறுகின்றனர். ஒவ்வொரு சினிமா காட்சி முடியும் பொழுதும் திரையரங்கை சுத்தப்படுத்துவதற்கும் சேர்த்து தான் வசூல் செய்கிறார்கள். மருத்துவ உதவி பெறும் பெரியோர்களை மன மகிழ்ச்சிக்காக சினிமா தியேட்டருக்கு அழைத்து செல்லும் பொழுதும் உள்ளே விற்கும் பொருட்களை வாங்க நிர்ப்பந்திக்கப்படுவதால் அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகிறது. எனவே தமிழக அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓ.டி.டி. தளம்

வேப்பந்தட்டை தாலுகா, கை.களத்தூரை சேர்ந்த சக்திவேல்:- குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சினிமா தியேட்டர்களில் படம் பார்ப்பது அனைவருக்கும் பிடித்த பொழுது போக்காகும். என்னதான் ஓ.டி.டி. தளங்கள் பெருகினாலும் தியேட்டர்களில் வந்து படம் பார்ப்பது என்பது அலாதியான அனுபவம். ஆனால் திரைப்பட டிக்கெட்டுகளுக்கு செலவழிப்பதை விட தின்பண்டங்களுக்கு அதிக செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் ஆசையே போய்விடுகிறது. எனவே இதன்விலையை தியேட்டர் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தியேட்டர் செலவீனம்...

சினிமா தியேட்டர்களில் வேலை பார்ப்பவர்கள் தரப்பில் கூறுகையில், தற்போது புதிய சினிமா திரைப்படம் வெளியான சில நாட்கள் தான் படம் பார்க்க கூட்டம் வருகிறது. அதற்கு பிறகு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே படம் பார்க்க வருகின்றனர். சினிமா தியேட்டர்களின் செலவீனங்களை ஈடுகட்டுவதற்காக தின்பண்டங்களின் விலை உயர்வாக உள்ளது. சிறிய, பெரிய சினிமா தியேட்டர்களுக்கு ஏற்ப தின்பண்டங்களின் விலை மாறுபடும்.

நிர்ப்பந்தம் செய்வது இல்லை

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர்:- திரையரங்குகளுக்குள் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை பின்பற்றுகிறோம். அதேபோல் சொத்து வரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள் அதிகரிப்பதால் அதற்கு ஏற்ற வருவாயை தேடிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். இடைவேளையில் விற்கப்படும் பாப்கானை பொறுத்த வரையில் சென்னையில் ரூ.400, ரூ.200, ரூ.150 என்ற விலையிலும், டிக்கெட் கட்டணத்தை பொறுத்தவரையில் ரூ.10, ரூ.70 மற்றும் ரூ.146 என்ற நிலையிலும் இருக்கிறது. பொதுமக்கள் தங்கள் வசதிக்கு தகுந்தவாறு வாங்கிக் கொள்ளலாம். சென்னையைவிட்டு பிற மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் பாப்கார்ன் ரூ.30 அதிகபட்சமாக ரூ.40 கட்டணத்தில்தான் விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் விற்பனை செய்யும் போது பாப்கான் கண்டிப்பாக வாங்கித்தான் ஆக வேண்டும் என்று யாரையும் நாங்கள் நிர்ப்பந்திப்பது இல்லை. அவர்களாகத்தான் சென்று வாங்கிக் கொள்கின்றனர். திரையரங்குகளில் பாப்கார்ன் மட்டும் அப்படி விற்பதில்லை, ரெயில் டிக்கெட் கவுண்ட்டரில் ஒரு கட்டணம், சாதாரணமாக ஆன்-லைனில் வாங்கினால் ஒரு கட்டணம், தட்கல் மற்றும் பிரிமியம் தட்கல் என்ற வகையில் கட்டணங்கள் மாறுபடுகிறது. செலவினங்களுக்கு ஏற்ப வருவாயை பெருக்கிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

டேட்டா கார்னர்

டீ- ரூ.30

காபி- ரூ.30

சமோசா- ரூ.30

பப்ஸ்- ரூ.40 முதல் 50 வரை

பாப்கார்ன்- ரூ.60 முதல் ரூ.160 வரை

குளிர்பானங்கள்- ரூ.50 முதல் ரூ.80 வரை

குடிநீர் பாட்டில்- ரூ.20

வாகன கட்டணம்

மோட்டார் சைக்கிள்- ரூ.10

கார்- ரூ.50


Next Story