'தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுகிறது'


‘தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுகிறது' என பொதுமக்கள் தெரிவித்தனர்.

விருதுநகர்

சினிமா தியேட்டர்கள் ஏழை, எளிய மக்களின் பொழுதுபோக்கு அரங்கம் என்று சொல்லப்படுவது உண்டு. ஆணும், பெண்ணும் குழந்தையும் குட்டியுமாக கிளம்பி திருவிழாவிற்கு போவது போல் தியேட்டர்களுக்கு போவார்கள். இப்போது அந்த ஆர்வமும், ஆசையும் இருந்தாலும்கூட அந்த மக்களால் சினிமா தியேட்டர்களுக்கு போகமுடியுமா என்று கேட்டால், முடியாது என்றே சொல்லத்தோன்றுகிறது.

மயக்கம் தரும் விலை

அந்த அளவில் தியேட்டர்கள் சாதாரண, சாமன்ய மக்களின் பட்ஜெட்டுக்கு உகந்ததாக இல்லை. டிக்கெட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், அங்குள்ள கேன்டீன்களில் விற்கப்படும் உணவுப்பண்டங்களின் விலைகளை கேட்டால் மயக்கம் போட்டுதான் விழ வேண்டும்.

10 ரூபாய், 20 ரூபாய்க்குக்கூட தகுதி இல்லாத வெறும் மக்காச்சோளப் பொரிக்கு (பாப்கார்ன்) 250 ரூபாய்! காபி, டீயா? 70 ரூபாய்! இது சாதாரணத்தியேட்டர்களில். மால்களில் இயங்கும் தியேட்டர்களில் இன்னும் பல மடங்கு அதிகம். பாப்கான் ரூ.400 வரை விற்கிறார்கள். நாம் கொண்டுபோகும் தின்பண்டங்களையும் அனுமதிக்க மாட்டார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் டிக்கெட் கட்டணத்தைவிட தின்பண்டங்கள் விலைகளே திகைக்க வைக்கின்றன.

இதனால் தியேட்டருக்கு குடும்பத்தோடு சினிமாவுக்குப் போகவேண்டும் என்ற ஆசை அடியோடு அற்றுப்போகிறது.

என்ன நியாயம்?

இதுபற்றி விசாரித்தால், ''தியேட்டர் பராமரிப்புச் செலவு அதிகமாகிறது. டிக்கெட் கட்டணம் அரசு நிர்ணயிப்பதால் அதை உயர்த்த முடியவில்லை. தின்பண்டங்களின் விலைகளை அதிகமாக வைத்திருக்கிறோம். யாரையும் கட்டாயப்படுத்தி தின்பண்டங்கள் வாங்கச் சொல்வது இல்லை'' என்கிறார்கள்.

நாம் கொண்டுபோகும் தின்பண்டங்களைப் பிடுங்கிவைத்துக் கொண்டு இவ்வாறு சொல்வது என்ன நியாயமோ? தெரியவில்லை.

சினிமா தொழிலுக்கு மூலதனமே அதைப் பார்க்கவரும் ரசிகர்கள்தான் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் ஆதங்கங்கள், கருத்துகள் வருமாறு:-

கட்டுப்பாடு வேண்டும்

விருதுநகரை சேர்ந்த தனியார் நிறுவன அலுவலர் அலமு:-

சினிமா திரையரங்குகளுக்கு குழந்தைகளின் நச்சரிப்பால் செல்ல வேண்டிய நிலையில் ஆன்லைனில் டிக்கெட் குறைந்தபட்சம் ரூ. 200 ஆகிறது. திரையரங்கம் நுழைந்தவுடன் குழந்தைகள் தின்பண்டங்கள் வாங்கி தர சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். வெளியில் நாம் வாங்கும் தின்பண்டங்களை விட 3 மடங்கு முதல் 4 மடங்கு விலை அதிகமாக உள்ளது. திரையரங்க உரிமையாளர்கள் கடையை ஒப்பந்த அடிப்படையில் விட்டு விட்டதால் அவர்கள் விலையை பற்றி கண்டு கொள்வதில்லை. ஆனாலும் இதற்கு ஒரு கட்டுப்பாடு தேவைப்படும் நிலையில் அரசு இதற்கும் ஒரு விதிமுறையை கொண்டு வர வேண்டியது அவசியம் ஆகும். திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் மற்றும் விலைக்கு ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டியது அவசியம்.

3 மடங்கு அதிகம்

விருதுநகர் கல்லூரி மாணவி அனந்திதா:-

வீட்டில் இருந்த படியே திரைப்படங்கள் பார்ப்பதற்கு தற்போது பல்வேறு வாய்ப்புகள் இருந்த போதிலும் திரையரங்குகளில் கல்லூரி தோழிகளுடன் சென்று பார்ப்பதில் தனி மகிழ்ச்சி தான். ஆனால் இடையில் தியேட்டரில் உள்ள கடைகளில் தின்பண்டங்கள் வாங்க சென்றால் அங்கு அவர்கள் சொல்லும் விலை அதிர்ச்சி அளிக்கிறது. டீ, காபி உள்ளிட்ட அனைத்து உணவு வகைகளும் அதிக விலைக்கு தான் விற்கப்படுகிறது.

வெளியில் ரூ.10-க்கும் கிடைக்கும் பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் கூட திரையரங்கில் 3 மடங்கு அதிகரித்து ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படுவதில்லை.

கடைகள் வடிவமைப்பு

ராஜபாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் விஜயராணி:-

பொதுவாக திரையரங்கில் பாப்கான், சமோசா போன்ற தின்பண்டங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. டிக்கெட் கட்டணம் ரூ.150 என்றால் தின்பண்டத்திற்கான செலவு ரூ.500-யை தாண்டி விடுகிறது. அதிலும் ஒரு திரையரங்குகளில் உள்ளே நுழைந்தவுடன் குழந்தைகளை கவரும் வகையில் தின்பாண்ட கடைகளை வடிவமைத்துள்ளனர். வெளியில் ரூ.20-க்கு விற்பனை ஆகும் ஐஸ்கிரீம் திரையரங்கில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேநிலைமை தான் மற்ற பொருட்களுக்கும்.

இவ்வாறு விலை அதிகம் கொடுத்து வாங்கும் பொருட்களும் தரமாக இருப்பதில்லை. அதுதான் மனதிற்கு வேதனை அளிக்கிறது. விலை ஏற்றத்தால் தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுகிறது.

பொழுது போக்கு

கல்லமநாயக்கர்பட்டி கல்லூரி மாணவர் செல்வராஜ்:-

பொழுது போக்கிற்காக நண்பர்களுடன் சென்று திரையரங்கில் படம் பார்க்க செல்கிறோம். என்னதான் செல்போனில் படம் பார்த்தாலும், திரையரங்கில் நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பதில் தனி மகிழ்ச்சி தான். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில் திரையரங்கில் உள்ள கடைகளுக்கு சென்றால் அவர்கள் கூறும் விலை தலை சுற்றுகிறது. ஒரு சில திரையரங்குகளில் பாப்கார்ன் ரூ.150 முதல் ரூ.400 வரையும், டீ, காபி ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

திரையரங்குகளில் பீசா, பாப்கார்ன், குளிர்பானங்கள், போன்றவை அநியாயமான விலையில் விற்கப்படுகிறது. பெற்றோர்கள் சினிமா பார்க்கத் தரும் தொகை குறைவு என்பதால் இடைவேளையில் சீட்டை விட்டு வெளியே போவதைத் தவிர்த்து விடுகிறோம். தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையும் போய்விடுகிறது.

பொதுமக்கள் அச்சம்

தாயில்பட்டி மண்குண்டாம்பட்டி மாணவி அழகேஸ்வரி:-

திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை விட தின்பண்டங்களின் விலை அதிகமாக உள்ளது. நாங்கள் எப்போதாவது தான் சினிமாவுக்கு செல்வோம். வெளியில் ரூ.20-க்கு விற்கும் பாப்கான் தியேட்டரில் ரூ.80-க்கும், வெளியில் ரூ.15-க்கு விற்கும் காபி திரையரங்கில் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை ஏற்றத்தால் சினிமாவிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை. இதே நிலை நீடித்தால் சினிமாவுக்கு யாரும் செல்ல அச்சப்படுவார்கள்.

நிர்ப்பந்தம் செய்வது இல்லை

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர் கூறும் போது, 'திரையரங்குகளுக்குள் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை பின்பற்றுகிறோம். அதேபோல் சொத்து வரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள் அதிகரிப்பதால் அதற்கு ஏற்ற வருவாயை தேடிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். இடைவேளையில் விற்கப்படும் பாப்கானை பொறுத்த வரையில் சென்னையில் ரூ.400, ரூ.200, ரூ.150 என்ற விலையிலும், டிக்கெட் கட்டணத்தை பொறுத்தவரையில் ரூ.10, ரூ.70 மற்றும் ரூ.146 என்ற நிலையிலும் இருக்கிறது. பொதுமக்கள் தங்கள் வசதிக்கு தகுந்தவாறு வாங்கிக் கொள்ளலாம். சென்னையைவிட்டு பிற மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் பாப்கார்ன் ரூ.30 அதிகபட்சமாக ரூ.40 கட்டணத்தில்தான் விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் விற்பனை செய்யும் போது பாப்கான் கண்டிப்பாக வாங்கித்தான் ஆக வேண்டும் என்று யாரையும் நாங்கள் நிர்ப்பந்திப்பது இல்லை. அவர்களாகத்தான் சென்று வாங்கிக் கொள்கின்றனர். திரையரங்குகளில் பாப்கார்ன் மட்டும் அப்படி விற்பதில்லை, ரெயில் டிக்கெட் கவுண்ட்டரில் ஒரு கட்டணம், சாதாரணமாக ஆன்-லைனில் வாங்கினால் ஒரு கட்டணம், தட்கல் மற்றும் பிரிமியம் தட்கல் என்ற வகையில் கட்டணங்கள் மாறுபடுகிறது. செலவினங்களுக்கு ஏற்ப வருவாயை பெருக்கிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது'.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story