மாவட்ட கலைத்திருவிழா தொடங்கியது


மாவட்ட கலைத்திருவிழா தொடங்கியது
x

சேலத்தில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா ெதாடங்கியது. இதில் 15 ஆயிரத்து 365 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.

சேலம்

சேலத்தில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா ெதாடங்கியது. இதில் 15 ஆயிரத்து 365 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.

கலைத்திருவிழா

மாணவ, மாணவிகளின் கலைத்திறன்களை வளர்க்கும் விதமாக அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழாக்களை நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடனம், நாடகம், இசை, கட்டுரை, கதை எழுதுதல், ஓவியம், பேச்சுப்போட்டி, இசைக்கருவி வாசித்தல், திருக்குறள் ஒப்புவித்தல், புகைப்படம் எடுத்தல், விவாத மேடை, பட்டிமன்றம் உள்ளிட்ட பல போட்டிகள் வட்டார அளவில் ஏற்கனவே நடைபெற்றது.

வட்டார அளவில் முதல் 2 இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட அளவிலான கலைவிழா நேற்று மரவனேரியில் உள்ள செயின்ட் பால் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது.

இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா தலைமை தாங்கினார். மேயர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கலைவிழாவை தொடங்கி வைத்தார்.

கல்விச்சுற்றுலா

இதே போன்று பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, பத்மவாணி, சக்தி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மணக்காடு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிறுமலர் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களிலும் கலை விழா நடைபெற்றது. இந்த கலை விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை நடக்கிறது. இதில் மொத்தம் 15 ஆயிரத்து 365 மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இடம் பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களின் தர வரிசை அடிப்படையில் 20 பேர் வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், கவுன்சிலர் கிரிஜா குமரேசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story