பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய மாவட்ட கலெக்டர்


பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய மாவட்ட கலெக்டர்
x

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து மாவட்ட கலெக்டர் உணவு அருந்தினார்.

கரூர்

காலை உணவு திட்டம்

கரூர் மாநகராட்சி காளியப்பனூர் அரசு ஆரம்ப பள்ளியில் நேற்று முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுவதை பார்வையிட்டு, மாவட்ட கலெக்டர் தங்கவேல் பள்ளி மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது அவர் கூறியதாவது:-முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில், கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 77 தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் 3,469 பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெற்றனர். இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கூடுதலாக கரூர் மாவட்டம் முழுவதும் மேலும் 628 மையங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் 25,980 மாணவ, மாணவிகள் பயன் பெற்று பெற்றனர். கரூர் மாவட்டத்தில் மொத்தம் 705 மையங்களில் 29,449 தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.

சிற்றுண்டி

இத்திட்டத்தில் திங்கட்கிழமை காலை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை சேமியா காய்கறி கிச்சடி, புதன்கிழமை காலை வெண்பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சேமியா கேசரி அல்லது ரவா கேசரி சுழற்சி முறையில் ரவா காய்கறி கிச்சடி இது போன்ற வகையான காலை உணவு சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் வழங்கப்படும் உணவுகள் தரமாக, சுவையாகயும், சத்தான உணவாக உள்ளதால் மாணவ செல்வங்கள் உணவினை விரும்பி சாப்பிடுவதை காண முடிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு

முன்னதாக தாந்தோணி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான மைய சமையல் கூடத்தினை பார்வையிட்டு சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story