தூர்வாரும் பணிகள் 29-ந் தேதிக்குள் முடிக்கப்படும்


தூர்வாரும் பணிகள் 29-ந் தேதிக்குள் முடிக்கப்படும்
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 29-ந் தேதிக்குள் முடிக்கப்படும் கலெக்டர் லலிதா தகவல் தெரிவித்துள்ளார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

தூர்வாரும் பணிகள்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் லலிதா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் கடைமடை பகுதி வரை முழுமையாக சென்றடையும் வகையில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.மயிலாடுதுறை மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 49 பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 85 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் வருகிற 29-ந் தேதிக்குள் முடிக்கப்படும்.

குறுவை சாகுபடி

மாவட்டத்தில் 92 ஆயிரத்து 500 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை பம்புசெட் நீரை கொண்டு 15 ஆயிரம் ஏக்கரில் நடவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 641 ஏக்கரில் நாற்றங்கால் தயார் நிலையில் உள்ளது. மீதமுள்ள நிலங்கள் நடவு செய்வதற்கு சமுதாய நாற்றாங்கால் அமைத்து நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறையை கடைபிடிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 10 முதல் 12 கிலோ முளைகட்டிய நெல் விதைகள் போதுமானது. நேரடி நெல் விதைப்பு கருவியினை பயன்படுத்தி விதைத்தால் குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெறமுடியும்.

மானிய விலையில் விதைகள்

மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான ஆடுதுறை 43, 45, 53, கோ-51 ஆகிய சன்னரக விதைகள், அம்பை 16, ஆடுதுறை 36 போன்ற மோட்டா ரக விதைகளும் இருப்பு உள்ளது. வேளாண் விரிவாக்க மையங்களில் விதை நெல் 50 சதவீத மானியத்தில், தேசிய உணவு பாதுகாப்புதிட்டம் மற்றும் விதை கிராம திட்டத்தின் கீழ் ஒரு கிலோ விதை ரூ.18.50-க்கு வழங்கப்பட்டு வருகிறது.வேளாண் விரிவாக்க மையம் மூலம் 120 மெட்ரிக் டன், தனியார் நிறுவனங்கள் மூலம் 904 மெட்ரிக் டன் விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 232 மெட்ரிக் டன் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், 625 மெட்ரிக் டன் தனியார் நிறுவனங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி விதைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் முருகண்ணன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.


Next Story