நடுவழியில் அரசு பஸ்சை நிறுத்தி டிரைவர், கண்டக்டர் போராட்டம்


நடுவழியில் அரசு பஸ்சை நிறுத்தி டிரைவர், கண்டக்டர் போராட்டம்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:45 PM GMT)

படியில் நின்று மாணவர்கள் பயணம் நடுவழியில் அரசு பஸ்சை நிறுத்தி டிரைவர், கண்டக்டர் போராட்டம் செஞ்சி அருகே பரபரப்பு

விழுப்புரம்

செஞ்சி

செஞ்சியில் இருந்து நேற்று மாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு டவுன் பஸ் ஒன்று ரெட்டணை நோக்கி சென்று கொண்டிருந்தது. மாலை நேரம் என்பதால் பள்ளி மாணவ-மாணவிகள் பயணம் செய்தனர். மேலும் செஞ்சி சந்தை என்பதால் பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதில் சில மாணவர்கள் பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்தனர். அவர்களை உள்ளே வரும்படி டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த டிரைவரும், கண்டக்டரும் திடீரென பஸ்சை நடுவழியில் நிறுத்தினர். இதனால் பயணிகளுக்கும், டிரைவருக்கும் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் மாணவர்களிடம் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது என்று அறிவுரை கூறி அவர்களை பஸ்சின் உள்ளே செல்லுமாறு கூறினர். உடனே அவர்கள் பஸ்சின் உள்ளே சென்றனர். இதன் பின்னர் அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story