சிகிச்சை பெற்று வந்த டிரைவர் சாவு
லாரி மீது கார் மோதிய விபத்தில் காயம் அடைந்த டிரைவர் சிகிச்சை பலன் இன்றி இறந்ததை அடுத்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது
புவனகிரி
லாரி மீது மோதியது
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூரை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 44). இவர் தனது மனைவி பரிமளா(42), மகன் தருண்ராஜ்(19) ஆகியோருடன் காரில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு புறப்பட்டார். காரை விக்னேஷ்(25) என்பவர் ஓட்டினார். அந்த கார், நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரி வண்டுராயன்பட்டு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
3 ஆக உயர்வு
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பரிமளா, தருண்ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த பழனிவேல், விக்னேஷ் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலன் இன்றி விக்னேஷ் நேற்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. பழனிவேலுவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.