நகர விற்பனைக்குழு உறுப்பினர் தேர்தல் அமைதியாக நடந்தது; இன்று வாக்கு எண்ணிக்கை
சென்னை நகர விற்பனைக்குழுவுக்கு 6 தெருவோர வியாபாரிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று அமைதியாக நடந்தது. மொத்தம் 13 ஆயிரத்து 506 பேர் வாக்களித்தனர்.
சென்னை,
சென்னை மாநகராட்சியில் தெருவோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதற்காக 15 பேர் கொண்ட நகர விற்பனைக்குழு சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட உள்ளது. இதில், 6 பேர் தெருவோர வியாபாரிகளில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த நிலையில், இந்த 6 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் 16 பெண்கள் உட்பட 53 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 11 பேர் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். 5 பேர் இதர பிற்பட்ட வகுப்பினர். 11 பேர் சிறுபான்மை இனத்தவர்கள். 6 பேர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் 12 பேர் பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஆர்வமுடன்
இந்த தேர்தலில் 35 ஆயிரத்து 588 பேர் வாக்களிக்க தகுதியானவர்களாக கண்டறியப்பட்டனர். நேற்று காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 103 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. காலை முதலே வியாபாரிகள் திரண்டு வந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். பட்டியலில் இடம்பெற்றவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசல் சான்றிதழை காண்பித்து வாக்களித்தனர். நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 6 ஆயிரத்து 319 ஆண்கள், 7 ஆயிரத்து 180 பெண்கள், 6 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 506 பேர் வாக்களித்தனர். இந்த தேர்தலில் 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.
அமைதியாக நடந்தது
நேற்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் வேட்பாளர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, அண்ணாநகரில் உள்ள அம்மா அரங்கத்திற்கு போலீசார் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்குள்ள பாதுகாப்பு அறையில் வேட்பாளர்கள் முன்னிலையில் மூடி சீல் வைக்கப்பட்டது. தெருவோர வியாபாரிகள் 6 பேரை தேர்வு செய்ய நடத்தப்பட்ட தேர்தல் அமைதியாக முடிந்தது.
இதைத்தொடர்ந்து, இன்று காலை 9 மணிக்கு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட உள்ளது. மாலை அல்லது இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வியாபாரிகளின் கோரிக்கை மற்றும் பிரச்சினைகளை மாநகராட்சி கவனத்திற்கு கொண்டு செல்வார்கள். உறுப்பினர்களின் ஆலோசனையின் அடிப்படையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.