மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை


மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
x
தினத்தந்தி 12 Sep 2023 6:21 PM GMT (Updated: 12 Sep 2023 6:24 PM GMT)

புதுக்கோட்டையில் மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

புதுக்கோட்டை

அமலாக்கத்துறையினர் சோதனை

தமிழகத்தில் மணல் குவாரி தொடர்புடையவர்களின் இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அந்த வகையில் புதுக்கோட்டையிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே முத்துப்பட்டினத்தை சேர்ந்தவர் எஸ்.ராமச்சந்திரன். இவர் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர் ஆவார். தொழில் அதிபரான இவர், கல்குவாரி உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது அலுவலகம் புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ளது.

இந்த அலுவலகம் இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் இன்று காலை 9.30 மணி அளவில் புகுந்து சோதனை மேற்கொண்டனர். அலுவலகத்தில் இருந்தவர்களிடம் கணக்கு விவரங்களை ஆராய்ந்தனர்.

வீடுகளில் சோதனை

இதேபோல முத்துப்பட்டினத்தில் உள்ள ராமச்சந்திரன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையை தொடர்ந்து அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் கந்தர்வகோட்டை அருகே புனல்குளம் பகுதியில் சண்முகம் என்பவரது கிராவல் குவாரியில் சோதனை நடைபெற்றது. சுமார் 1 மணி நேர சோதனைக்கு பின் அங்கிருந்து ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர்.

இதேபோல புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவன அலுவலகத்திலும், வம்பன் அருகே மழவராயன்பட்டியில் அவரது உறவினரான வீரப்பன் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் புதுக்கோட்டை நிஜாம் காலனியில் ராமச்சந்திரனுக்கு நெருக்கமான தொழில் அதிபர் மணிவண்ணன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையின் தொடர்ச்சியாக புதுக்கோட்டை கே.எல்.ஏ.எஸ்.நகரில் ஒரு ஆடிட்டர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வரி ஏய்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் ௭ இடங்களில் அமலாக்கத்துறையினரின் சோதனை நடைபெற்றது.

அமலாக்கத்துறையினரின் சோதனையை உளவுப்பிரிவு போலீசாரும் கண்காணித்ததில் 7 இடங்களில் சோதனை உறுதியானது. இந்த சோதனையானது மணல் குவாரி நடத்தியதில் வரி ஏய்ப்பு, அதில் இருந்து கிடைத்த பணத்தின் மூலம் வேறு முதலீடுகள், சட்ட விரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. காலையில் தொடங்கிய சோதனை வரை நீடித்தது.


Next Story