வைகை தண்ணீர் வரத்தால் நிரம்பி வரும் கண்மாய்கள்


வைகை தண்ணீர் வரத்தால் நிரம்பி வரும் கண்மாய்கள்
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை தண்ணீர் வரத்தால் கண்மாய்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை தண்ணீர் வரத்தால் கண்மாய்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வைகைநீர் வீணானது

மதுரை வைகை அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெள்ள நீர் திறக்கப்பட்டது. வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரானது பார்த்திபனூர் மதகு அணை வந்தடைந்து அங்கிருந்து பரமக்குடி, வழியாக ராமநாதபுரம் காருகுடி பெரிய கண்மாய் கலுங்குபகுதிக்கு வந்தடைந்தது.

வைகை அணையில் இருந்து தொடர்ந்து வைகை நீர் வந்து கொண்டிருந்ததால் பெரிய கண்மாய் நிரம்பும் நிலை ஏற்பட்ட நிலையில் காருகுடி பெரிய கண்மாய் பகுதியில் இருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு ஒரு புறமும், மறுபுறம் வைகை நீரானது புல்லங்குடி வழியாக பனைக்குளம் நதிப்பாலம் வழியாக ஆற்றங்கரை முகத்துவார கடல் பகுதியில் வைகை நீர் கலந்து வீணானது.

தினத்தந்தியில் செய்தி

இதையடுத்து வறண்ட மாவட்டம் என்று அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான கண்மாய் மற்றும் ஊருணிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காட்சியளித்து வரும் நிலையில் வீணாக கடலில் கலக்கும் வைகை நீரை தடுத்து நிறுத்தி கண்மாய்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதன் எதிரொலியாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பார்த்திபனூர் மதகணையில் இருந்து வரும் வைகை தண்ணீரை ராமநாதபுரத்தை சுற்றி பல கிராமங்களில் உள்ள ஊருணி மற்றும் கண்மாய்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து ராமநாதபுரம் காவனூர் அருகே உள்ள காருகுடி பெரிய கண்மாய் பகுதியில் இருந்து கடலுக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 4 நாட்களுக்கு மேலாகவே முழுமையாக நிறுத்தப்பட்டது. மேலும் காருகுடி பெரிய கண்மாய் கலுங்கு பகுதியில் இருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய் மற்றும் சக்கரக்கோட்டை கண்மாய்க்கும் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நிரம்பியது

மேலும் பரமக்குடியில் இருந்து வந்த வைகை நீரானது கிழக்கோட்டை பகுதியில் இருந்து திருப்பிவிடப்பட்டு மேலச்சீத்தை கண்மாய் நிரம்பி தற்போது திருஉத்தரகோசமங்கை கண்மாய்க்கும் தண்ணீர் கூடுதலாக வரத்தொடங்கியது. திருஉத்திரகோசமங்கை கண்மாய்க்கும் தண்ணீர் ஓரளவு வரத் தொடங்கியுள்ளதோடு அருகே உள்ள களரி கண்மாய்க்கும் வைகைநீரானது சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதை தவிர திருஉத்தரகோசமங்கை அருகே உள்ள கழக்குடி கண்மாய் முழுமையாக வைகை தண்ணீர் வரத்தால் நிரம்பியது.

இதுபற்றி திருஉத்தரகோசமங்கை கிராமத்தை சேர்ந்த விவசாயி கருணாகரன் கூறும்போது, கோடை காலத்தில் திருஉத்தரகோசமங்கை கண்மாயில் இவ்வளவு அதிகமாக தண்ணீரை பார்த்ததே கிடையாது. கடந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் உத்தரகோசமங்கை கண்மாய் நிரம்பியது. கண்மாய் தண்ணீர் அதிகம் உள்ளதால் இந்த தண்ணீரை விவசாயத்திற்கும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மாவட்டத்தில் பெரிய கண்மாய், சக்கரக்கோட்டை கண்மாய், கழக்குடி திருஉத்தரகோசமங்கை கண்மாய் உள்ளிட்ட இதுவரை 26 கண்மாய்கள் நிரம்பி உள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டத்தில் பல கண்மாய்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story