கள்ளக்காதலி உயிரோடு எரித்துக் கொலை: திடீரென உறவை முறித்துக்கொண்டதால் வாலிபர் வெறிச்செயல்


கள்ளக்காதலி உயிரோடு எரித்துக் கொலை: திடீரென உறவை முறித்துக்கொண்டதால் வாலிபர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 1:59 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே திடீரென உறவை முறித்துக்கொண்டதால் கள்ளக்காதலியை உயிரோடு எரித்துக் கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே உள்ள நகர் கிராமம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குருசாமி என்பவரது மகன் முருகன். இவருடைய மனைவி விசாலாட்சி(வயது 38). இவருக்கும் மேட்டுத்தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் முருகன்(29) என்பவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்துள்ளது.

இந்நிலையில் விசாலாட்சி சமீபத்தில் ஏ.முருகனுடனான உறவை முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதை, ஏ.முருகனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கடந்த 19-ந்தேதி இரவு அவர், விசாலாட்சியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நகர் கிராமம் ஆலமரம் அருகே குப்பை கொட்டும் இடத்திற்கு வரும்படி கூறி மிரட்டி உள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த விசாலாட்சி, வேறு வழியின்றி கையில் மண்எண்ணெய் கேனுடன் சென்றார்.

அங்கு விசாலாட்சி, ஏ.முருகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அவரை ஏ.முருகன் திட்டி தாக்கினார். மேலும் விசாலாட்சி கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து அவர் மீது ஊற்றி ஏ.முருகன் தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் உடலில் தீ பற்றிய விசாலாட்சி, வலியால் அலறி துடித்தபடி, ஊருக்குள் ஓடி வந்தார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, அவர் மீது பற்றி எரிந்த தீயை பொதுமக்கள் அணைத்து, அவரை சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இது குறித்து விசாலாட்சி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு கொலை வழக்காக பதிவு செய்து, ஏ.முருகனை கைது செய்தார்.


Next Story