பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து இல்லை


பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து இல்லை
x

பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து இல்லை

திருப்பூர்

தளி

மேற்கு ெதாடர்ச்சி மலையில் தென்மேற்கு பருவமழை பெய்யாததால் பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து இல்லை. இதனால் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அமணலிங்கேசுவரர் கோவில்

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒருசேர ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்தகன்னிமார் மற்றும் நவகிரக சன்னதிகளும் உள்ளன. கோவிலில் மகாசிவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை, அமாவாசை, தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களில் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

மேலும் கோவிலுக்கு வருகின்ற வழியில் படகு இல்லம், சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், திருமூர்த்திஅணை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அவற்றை பார்வையிடவும் அணைப் பகுதியில் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழவும் மலைமீது உள்ள பஞ்சலிங்க அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காகவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர். இதனால் உடுமலை பகுதியின் சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலமாக திருமூர்த்திமலை விளங்கி வருகிறது.

அருவி

தற்போது தென்மேற்கு பருவழை பெய்யும் சீசனாகும். ஆனால் எதிர்பார்த்தபடி தென்மேற்கு பருவமழை தொடங்கவே இல்லை. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து விட்டது. இயற்கை நிறைந்த சில்லென்ற சுற்றுச்சூழலில் கண்கொள்ளாக் காட்சியில் மனதை கொள்ளை கொள்ளும் அழகில் இருந்த பஞ்சலிங்க அருவி பொழிவு இழந்து காணப்படுகிறது. இதனால் விடுமுறையான நேற்று அருவியல் குளித்து மகிழலாம் என்ற உற்சாகத்தோடு திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து மும்மூர்த்திகளை சாவத தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் சென்றனர்.

ஒரு சில சுற்றுலாபயணிகள் அணைக்கு அருகில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்தனர்.இதனால் கோவில், அருவி, அணை உள்ளிட்ட பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. மேலும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது.மழை தீவிரம் அடைந்து அருவிக்கு நீர்வரத்து ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு பக்கர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் நிலவி வருகிறது.



Next Story