விவசாயி அரிவாளால் வெட்டி படுகொலை
திருச்சியில் விவசாயியை அரிவாளால் வெட்டி கொன்ற ரவுடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சியில் விவசாயியை அரிவாளால் வெட்டி கொன்ற ரவுடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடை போடுவதில் தகராறு
திருச்சி கீழ தேவதானம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஓயாமரி சுடுகாடு அருகே உள்ள குருஅரிசந்திர பைரவர் கோவில் கேட்டின் முன்பு விளக்கு கடை வைத்துள்ளார்.
அதேபகுதியில் வன்னியாயி மற்றும் செந்தமிழ்செல்வி ஆகியோரும் விளக்கு கடை வைத்து நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் அங்கு கடை போடுவதில் இரு தரப்பினருக்கும் இடையே நேற்று பகலில் தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறில் மஞ்சுளாவின் கணவர் ராஜேந்திரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது பற்றி அறிந்த ராஜேந்திரனின் மகன் அருண்பிரசாத் (வயது 33) ஆத்திரம் அடைந்தார். ரவுடியான அருண்பிரசாத் தனது தந்தையை தாக்கிய வன்னியாயி உறவினரான மணிமாறனை பழிவாங்குவதற்காக நேற்று இரவு அரிவாளுடன் சென்றார்.
அரிவாளால் வெட்டி கொலை
அப்போது வீட்டில் இருந்த வன்னியாயி கணவரான விவசாயி தனபாலை (60) கண்டதும், அருண்பிரசாத் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு மார்பு, வயிற்று பகுதியில் வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அருண்பிரசாத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்த கோட்டை போலீசார் அங்கு சென்று தனபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் துணை கமிஷனர் அன்பு, உதவி கமிஷனர் நிவேதா லெட்சுமி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், அங்கு அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். தொடர்ந்து இந்த கொலை சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருண்பிரசாத்தை தேடி வருகிறார்கள்.