உடலில் பெட்ரோலை ஊற்றி விவசாயி தீக்குளிக்க முயற்சி


உடலில் பெட்ரோலை ஊற்றி விவசாயி தீக்குளிக்க முயற்சி
x

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றி விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றி விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலை முயற்சி

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தின்போது, திருச்சியை அடுத்துள்ள நத்தமாடிப்பட்டியை சேர்ந்த மக்கள் உரிமை கூட்டணியின் நிர்வாகியான விவசாயி ஜோசப் என்பவர் மனு அளிக்க வந்தார்.

இவர் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட போலீசார் ஓடிச் சென்று அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை கலெக்டரிடம் அழைத்து சென்றனர்.

அப்போது அவர் கலெக்டரிடம், கடந்த மாதம் 16-ந் தேதி சிலர் தன்னை தாக்கி செல்போனையும், ரூ.10 ஆயிரத்தையும் வழிப்பறி செய்து விட்டனர். இது குறித்து திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் என்னை தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அவர்கள் கொடுத்த புகாரில் என் மீது வழக்குப்பதியப்பட்டது. ஆகவே திருவெறும்பூர் போலீசாரை கண்டித்து தற்கொலை முடிவை எடுத்ததாக கூறினார்.

கலெக்டர் எச்சரிக்கை

இதையடுத்து கலெக்டர் பிரதீப் குமார், அவரிடம் இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இதுபோல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் உங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story