சின்னத்திரை நடிகரை துப்பாக்கியால் சுட்ட விவசாயி


சின்னத்திரை நடிகரை துப்பாக்கியால் சுட்ட விவசாயி
x

நிலத்தகராறில், சின்னத்திரை நடிகர் உள்பட 2 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். வெறிச்செயலில் ஈடுபட்ட விவசாயியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சின்னத்திரை நடிகர்

திண்டுக்கல் மாவட்டம் நெல்லூரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 50). சின்னத்திரை நடிகர். இவர் வாணி-ராணி சீரியலில் நடித்துள்ளார்.இவருக்கு சொந்தமான நிலம், திண்டுக்கல் அருகே சிறுமலை அகஸ்தியர்புரத்தில் உள்ளது. அங்கு தங்கியிருந்து, கருப்பையா விவசாயம் செய்து வருகிறார். சிறுமலை அகஸ்தியர்புரத்தை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (52). இவர் அதேபகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவரும், கருப்பையாவும் நண்பர்கள்.

நிலத்தகராறு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் தனபால் (50). விவசாயி. இவர், சிறுமலை அகஸ்தியர்புரத்தில் நிலம் வாங்கி அங்கேயே தங்கியிருந்து விவசாயம் செய்து வருகிறார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனபாலிடம், கருப்பையா 5 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். இந்த நிலத்தை அளவீடு செய்தபோது, 4½ ஏக்கர் மட்டுமே இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கருப்பையா, ராஜாக்கண்ணு ஆகியோர் தனபாலிடம் ½ ஏக்கர் நிலத்துக்கான பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.

2 பேர் மீது துப்பாக்கி சூடு

இந்தநிலையில் நேற்று அகஸ்தியர்புரத்தில் தனபால் வீட்டு முன்பு நின்று 3 பேரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது கருப்பையா, ராஜாக்கண்ணு இருவரும் ½ ஏக்கர் நிலத்துக்கான பணத்தை தனபாலிடம் அவர்கள் மீண்டும் கேட்டனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த தனபால், வீட்டுக்குள் சென்று நாட்டு துப்பாக்கியுடன் வெளியே வந்தார். பின்னர் அவர் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதனைக்கண்ட கருப்பையா, ராஜாக்கண்ணு ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் சுதாரிப்பதற்குள் கருப்பையா மீது, துப்பாக்கியால் தனபால் சரமாரியாக சுட்டார். இதில் கருப்பையாவின் வயிறு, கை மற்றும் தொடை பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதை தடுக்க முயன்ற ராஜாக்கண்ணுவும் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் அவரது கை விரலில் காயம் ஏற்பட்டது.

உயிருக்கு போராட்டம்

துப்பாக்கி சூடு சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் ரத்தம் சொட்ட, சொட்ட உயிருக்கு போராடி கொண்டிருந்த கருப்பையாவை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ராஜாக்கண்ணுவுக்கு சிறுமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

துப்பாக்கி பறிமுதல்

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனபாலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அது உரிமம் இல்லாத துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story