ஊழியர்கள் இருந்த அலுவலகத்தை விவசாயிகள் பூட்டு போட்டு போராட்டம்
உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.80 லட்சம் பாக்கி தொகையை தராததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் ஊழியர்கள் இருந்த அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உளுந்தூர்பேட்டை
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் நெல், மணிலா, மக்காச்சோளம் உள்ளிட்ட விளை பொருட்களை அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 3 மாத காலமாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விற்பனை செய்த விளை பொருட்களுக்கான பாக்கி தொகை ரூ.80 லட்சத்தை கொடுக்காமலும், வங்கி கணக்கில் செலுத்தாமலும் வியாபாரிகள் அலைக்கழித்து வந்தனர்.
அலுவலகத்துக்கு பூட்டு
இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு விவசாயிகள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு சென்று அங்கு ஊழியர்கள் இருந்த அலுவலகத்தின் கதவுகளை திடீரென மூடி பூட்டு போட்டு தங்கள் பணத்தை திருப்பி கொடுக்கும் வரை ஊழியர்களை வெளியே விடமாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகத்தின் உள்ளே இருந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
இது பற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். பின்னர் பூட்டு போட்ட அலுவலகத்தின் கதவுகளை திறந்தனர். இந்த சம்பவத்தால் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.