அதிகாரிகள் வராததை கண்டித்து வெளிநடப்பு செய்ய முயன்ற விவசாயிகள்


அதிகாரிகள் வராததை கண்டித்து வெளிநடப்பு செய்ய முயன்ற விவசாயிகள்
x

விழுப்புரம் குறைகேட்பு கூட்டத்துக்கு அதிகாரிகள் வராததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ய முயன்றனர். அப்போது அறையின் கதவை இழுத்து மூடி அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி தலைமை தாங்கி விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

இக்கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், வானூர், கண்டாச்சிபுரம் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதை கேட்டறிந்த கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, இந்த கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

வெளிநடப்பு செய்ய முயன்ற விவசாயிகள்

முன்னதாக கூட்டத்தின் இடையே பேசிய சில விவசாயிகள், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அரசுத்துறை அதிகாரிகள் ஏன் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திற்கு வரவில்லை. இப்படி செய்தால், நாங்கள் எங்கள் குறைகளை யாரிடம் சொல்வது. எங்களுடைய கேள்விகளுக்கு யார் பதில் அளிப்பது, சோறு போடுகிற விவசாயிகளை அதிகாரிகள் யாரும் மதிப்பதில்லை.

கூட்டத்திற்கு வராத அதிகாரிகளை சஸ்பெண்டு செய்யுங்கள் என்றுகூறி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்ததோடு கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்ய விவசாயிகள் முயன்றனர். உடனே அங்கிருந்த அதிகாரிகள் சிலர் கூட்டம் நடந்த அறையின் கதவை இழுத்து மூடி விவசாயிகளை வெளியே செல்லவிடாமல் தடுத்தனர்.

அதிகாரிகளுக்கு நோட்டீசு

பின்னர் அவர்களிடம் எனக்காக ஒருமுறை பொறுத்துக்கொள்ளுங்கள் என்றும், அடுத்த கூட்டத்திற்கு வரவைக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி சமாதானப்படுத்தினார். தொடர்ந்து கூட்டத்திற்கு வராத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடமும் புகார் செய்யப்படும் என்றார்.

இச்சம்பவத்தினால் கூட்டத்தில் பெரும் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது.


Next Story