பிரிந்து வாழ்ந்த மனைவியுடன் வசித்துவந்த குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார்
பிரிந்து வாழ்ந்த மனைவியுடன் வசித்துவந்த குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் அளித்தார்.
பிரிந்து வாழ்ந்தனர்
அமைந்தகரையை சேர்ந்தவர் செல்வபிரகாசம் (வயது 27), இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு லாவண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது மகன் சர்வேஸ்வரன் (3). கணவன், மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் தனது மகனை லாவண்யா தன்னுடன் வைத்து கொண்டிருந்ததாகவும், 2 நாட்களுக்கு முன்பு செல்வபிரகாசம், லாவண்யா வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டில் லாவண்யா இல்லை என்றும் மகன் சர்வேஸ்வரன் இறந்து விட்டதாக அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் தெரிவித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சாவில் சந்தேகம்
மேலும் மகன் இறந்து போன தகவலை தனக்கு தெரிவிக்காமல் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு லாவண்யா எங்கேயோ சென்று விட்டதாகவும் மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக மாங்காடு போலீஸ் நிலையத்தில் செல்வபிரகாசம் புகார் ஒன்றை அளித்தார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-
லாவண்யா கணவரை பிரிந்து வந்த நிலையில் மணிகண்டன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. குழந்தை சர்வேஸ்வரன் விளையாடும் போது கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீண்டும் சில தினங்களுக்கு முன்பு மயக்கம் அடைந்த சர்வேஷ்வரனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அவ்வாறு செல்லும் வழியில் இறந்து விட்டதாகவும் உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது தாயாரிடம் ஒப்படைத்து விட்டதாகவும் இறப்புக்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.