பல்லிகள் என நினைத்து பார்த்த போது அதிர்ச்சி: வீட்டில் ஏ.சி. எந்திரத்தில் குட்டிகளுடன் குடித்தனம் நடத்திய விஷப்பாம்பு


பல்லிகள் என நினைத்து பார்த்த போது அதிர்ச்சி: வீட்டில் ஏ.சி. எந்திரத்தில் குட்டிகளுடன் குடித்தனம் நடத்திய விஷப்பாம்பு
x

சிவகங்கை அருகே ஏ.சி. எந்திரத்திற்குள் குடித்தனம் நடத்தி வந்த பாம்புகளை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்தனர்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் உள்ள ஏ.சி. எந்திரத்திற்குள் இருந்து 3 பல்லிகள் எட்டி பார்ப்பதாக இவரது மகன் சுலைமான் கூறியுள்ளார்.

இதையடுத்து அபுபக்கர் சித்திக் உடனடியாக ஏ.சி. எந்திரத்தை அணைத்து விட்டு ஏ.சி. பழுதுபார்க்கும் நபரை வரவழைத்துள்ளார். அந்த நபர், ஏ.சி. எந்திரத்தை கழற்றி பார்த்தார். அப்போது அந்த எந்திரத்திற்குள் நிறைய பாம்புகள் குடித்தனம் நடத்தி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய சிறப்பு அலுவலர் ஆனந்த் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். ஏ.சி. எந்திரத்திற்குள் இருந்த பாம்புகளை ஒன்றன் பின் ஒன்றாக லாவகமாக பிடித்தனர். மொத்தம் 5 விஷ பாம்புகள் பிடிபட்டன. அவை கொம்பேறி மூக்கன் வகையை சேர்ந்த விஷ பாம்புகள் ஆகும்.

இந்த பாம்புகளை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்து ஒரு சாக்குப்பையில் அடைத்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த பாம்புகள் மண்மலை காட்டில் விடப்பட்டன.


Next Story