தமிழ்நாட்டை டிரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற்றுவதே முதல் இலக்கு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தமிழ்நாட்டை டிரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற்றுவதே முதல் இலக்கு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 23 Feb 2024 6:03 AM GMT (Updated: 23 Feb 2024 6:14 AM GMT)

முதல் 2 ஆண்டுகளில் நிதி அமைச்சராக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். இதன் பின்னர் அவர் பேசியதாவது;

முதல் 2 ஆண்டுகளில் நிதி அமைச்சராக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டவர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். நிதித்துறையை போலவே ஐ.டி. துறைக்கும் மாற்றங்கள் தேவைப்பட்டதால் பழனிவேல் தியாகராஜனை ஐ.டி. துறைக்கு மாற்றினேன். நான் கொடுத்த பொறுப்பை சிறப்பாக செயல்படுத்துகிறார் என்பதற்கு இந்த மாநாடு ஒரு உதாரணம். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பணி சிறக்க வாழ்த்துகள்.

கால் நூற்றாண்டுக்கு முன்பே, 'வரும் காலம் கணினி காலம்' என்று கணித்தவர் கலைஞர். 1996-ல் கணினி வாசலை திறந்தவர் கலைஞர் கருணாநிதி. கலைஞரின் தொலைநோக்கு பார்வை கொண்ட முயற்சியால் இந்தியாவிலேயே ஐ.டி. தொழில் புரட்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. நாங்கள் அவரை நவீன தமிழ்நாட்டின் சிற்பி என்று சொல்கிறோம்.

எனக்கு இரண்டு கனவுகள் உள்ளன. ஒன்று, தமிழ்நாட்டை டிரில்லியன் பொருளாதார மாநிலமாக உயர்த்த வேண்டும். இரண்டு, உலகத்தின் மனிதவள தலைமையகமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும். அதற்கான முழு ஈடுபாட்டுடன் என்னை நானே அர்ப்பணித்துக்கொண்டு இருக்கிறேன்.

ஐ.டி. துறையின் வளர்ச்சியும் மாற்றமும்தான் திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை. அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி 5ஜி அலைக்கற்றை அமைப்பை துரிதப்படுத்தினோம்.

தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் எந்த வகையான முன்னேற்றத்தை அடைகிறதோ, அதே தொழில்நுட்ப வளர்ச்சியை அதே காலத்தில் உருவாக்க உழைப்போம்." இவ்வாறு அவர் பேசினார்.


Next Story