பல்வேறு திட்டங்களை வகுத்து முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்

மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறி்னார்.
திருச்சிற்றம்பலம்
மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறி்னார்.
தையல் பயிற்சி வகுப்பு
திருச்சிற்றம்பலம் அருகே புனல்வாசல் ஊராட்சியில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் அந்த பகுதியில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு மாத கால இலவச தையல் பயிற்சி வகுப்பினை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் பயிற்சி பெறுவதற்கான தையல் எந்திரங்களையும் கலெக்டர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
இதனையொட்டி நடந்த விழாவிற்கு அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பேராவூரணி ஒன்றிய ஆணையர் தவமணி வரவேற்றார். பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பிரபாகர், பேராவூரணி ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
பல்வேறு திட்டங்கள்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளுக்கான துறையை தன்னிடம் வைத்து அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார். அவர்கள் அனைவரும் சொந்த காலில் நிற்க வேண்டும், பொருளாதார நிலையில் உயர்வு பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.
அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு செல்ல வேண்டும் என்பதில் நாம் அனைவரும் முன்னெடுப்புடன் செயல்பட வேண்டும். இங்கு பயிற்சி பெற உள்ள மாற்றுத்திறனாளிகள், தையல் கலையில் பயிற்சி பெற்று அவர்கள் உற்பத்தி செய்யும் ஆடைகளை தஞ்சையில் உள்ள ஜவுளி நிறுவனத்தின் உரிமையாளர் பெற்றுக்கொண்டு அதனை சந்தைபடுத்துவதாக அறிவித்துள்ளார். இந்த முயற்சிக்கும் அதற்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்ெகாள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டோர்
விழாவில் பேராவூரணி ஒன்றிய ஆணையர் குமரவேல், புனல்வாசல் ஊராட்சி தலைவர் சிவசம்மாள் ராமராசு, தொழில் அதிபர் முகமது ரபி மற்றும் இளந்தென்றல் மாற்றுத்திறனாளிகள் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோன் ஆப் ஆர்க் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரெங்கராஜன் நன்றி கூறினார்.