4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x

4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் கடல் சீற்றம் காரணமாக 4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

வாழ்வாதாரம் கேள்விக்குறி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. தரங்கம்பாடியில் இருந்து சென்னை, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் மீன்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். தரங்கம்பாடியில் தற்போது துறைமுகம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் சிறு தொழில் மீனவர்களாகவே உள்ளனர். இங்கு 450 பைபர் படகுகளும், 40 விசைப்படகுகளும் மற்றும் 200 நாட்டுப்படகுகளும் வைத்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காற்று, இயற்கை சீற்றங்களால் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து இவர்கள் கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் மீன் பிடிக்க செல்ல முடியாத காரணத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். ஒரு நாளைக்கு பல லட்ச ரூபாய் வர்த்தகம் செய்யும் தரங்கம்பாடி மீனவர்கள், தற்போது இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

கடந்த சில தினங்களாக வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதியில் பலத்த மழை பெய்தது. தரங்கம்பாடியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் மீனவர்கள் நேற்று 4-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இதுகுறித்து தரங்கம்பாடி தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கூறுகையில், கடந்த வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மீன் பிடிக்க செல்லவில்லை. அனைத்து மீனவர்களும் தங்களுடைய விசைப்படகு, பைபர் படகு மற்றும் நாட்டுப் படகுகளை தரங்கம்பாடி துறைமுகம் அருகே கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து உள்ளனர். கடலில் அதிக சீற்றம் காணப்படுகிறது.

நடுக்கடலில் சுழல் காற்று வீசிக்கொண்டிருக்கிறது. கடலோர காவல்துறை மற்றும் மீன்வளத்துறையினர் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று எச்சரித்து உள்ளனர். நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை மீன் பிடிக்க செல்ல மாட்டோம்.

பல லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

கடந்த வடகிழக்கு பருவ மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக 3 மாதங்களாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்தோம். கரை தொழிலுக்கும் போக முடியவில்லை. தற்போது கடலில் மீன்கள் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். கவலை மீன்கள் சீசன் தொடங்கி விட்டது. அந்த மீன்களை பிடித்து வழக்கம் போல் ஏற்றுமதி செய்வோம். தற்போது கடலுக்கு செல்லாததால் கவலை மீன்கள் மீண்டும் ஆழமான கடல் பகுதிக்கு சென்று விடும். சில காலம் தான் அவ்வகை மீன்கள் உயிர் வாழும். இதனால் ஒரு நாளைக்கு பல லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.


Next Story