மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 131 கன அடியாக குறைந்தது


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 131 கன அடியாக குறைந்தது
x

மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 131 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

குறுவை பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். அதன்படி நடப்பாண்டில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் நீர் இருப்பை கருத்தில் கொண்டு தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது நீர் இருப்பு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் முதல் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது. நேற்று முன்தினம் 388 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 154 கன அடியாக சரிந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 131 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று காலை 61.26 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 60.11 அடியாக குறைந்தது. அணையில் 24.76 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. அணையில் தண்ணீர் குறைவாக உள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story