சரக்கு போக்குவரத்து நிறுவனம் ரூ.3½ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்


சரக்கு போக்குவரத்து நிறுவனம் ரூ.3½ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 10 Oct 2023 12:30 AM IST (Updated: 10 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

வாைழக்கன்றுகளை வெளிநாட்டுக்கு அனுப்பாததால் சேதம் அடைந்த சேவை குறைபாட்டுக்கு, சரக்கு போக்குவரத்து நிறுவனம் ரூ.3½ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

கோயம்புத்தூர்

கோவை

வாைழக்கன்றுகளை வெளிநாட்டுக்கு அனுப்பாததால் சேதம் அடைந்த சேவை குறைபாட்டுக்கு, சரக்கு போக்குவரத்து நிறுவனம் ரூ.3½ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

வாழைமரக் கன்றுகள் ஏற்றுமதி

கோவை வெள்ளலூர் பகுதியில் வாழைமரக் கன்றுகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விக்ரம் வெங்கடேஷ். இவர் கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி உள்ளதாவது:- எங்கள் நிறுவனம் மூலம் வாழைமரக் கன்றுகள் ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்தநிலையில் ஓமன் நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தினர், 30 ஆயிரம் வாழை கன்றுகள் தேவை என கடந்த 19-2-2020 அன்று கேட்டு இருந்தனர். இதையடுத்து வாழைமரக் கன்றுகளை ஏற்றுமதி செய்ய கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சரக்கு போக்குவரத்து நிறுவனத்தை அணுகினோம். அவர்கள் அதே ஆண்டு மார்ச் 16-ந் தேதி மதியம் 1 மணிக்குள் வாழை கன்றுகள் தங்களிடம் வந்து சேர வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தனர்.

அதன்படி அன்றையதினம் நண்பகல் 12.30 மணிக்கு சரக்கு ஒப்படைக்கப்பட்டது. ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்த நிலையில், தாமதமாக சரக்கு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறி அன்றைய தினம் விமானத்தில் சரக்கை அவர்கள் ஏற்றவில்லை. இதையடுத்து அடுத்த விமானத்தில் சரக்கை அனுப்பிவைப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அடுத்த 4 நாட்களுக்கு சரக்கை குளிர்சாதன வசதியில் வைக்காததால், வாழை மரக்கன்றுகள் வாடி சேதமாகின.

ரூ.3½ லட்சம் இழப்பீடு

மேலும் எங்கள் வாடிக்கையாளருக்கு வாழை மரக்கன்றுகள் சென்றடையவில்லை. இதனால் வெளிநாட்டில் உள்ள எங்கள் வாடிக்கையாளருக்கு எங்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதுடன் ரூ.3 லட்சத்து 26 ஆயிரம், முன்பணமாக செலுத்திய தொகையான ரூ.20 ஆகியவை இழப்பு ஏற்பட்டது. இந்த தொகையை அளிக்க சரக்கு போக்குவரத்து நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு தலைவர் ஆர்.தங்கவேல், உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் விசாரித்தனர். அதில், விக்ரம் வெங்கடேஷ் சரக்கு போக்குவரத்து நிறுவனத்திடம் தாமதமாக வாழை கன்றுகளை அளித்தற்கான ஆதாரம் எதுவும் இல்லை. சுங்கத்துறையினரின் அனுமதிக்கு பிறகும் சரக்கு விமானத்தில் ஏற்றப்படவில்லை. எனவே சரக்கின் மதிப்பான ரூ.3.26 லட்சம், முன்பணமாக மனுதாரர் செலுத்திய ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.3.46 லட்சத்தை 9 சதவீத வட்டியுடன், சரக்கு போக்குவரத்து நிறுவனம் அளிக்க வேண்டும். மேலும் விக்ரம் வெங்கடேசுக்கு வழக்கு செலவாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.



Next Story