'மலைகளின் இளவரசி'யை சிறைபிடித்த உறைபனி


மலைகளின் இளவரசியை சிறைபிடித்த உறைபனி
x
தினத்தந்தி 5 Jan 2023 7:15 PM GMT (Updated: 5 Jan 2023 7:15 PM GMT)

‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலை சிறைபிடித்ததை போல உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்


உறைபனியின் ஆக்கிரமிப்பு


'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில், வழக்கமாக டிசம்பர் மாத ஆரம்பத்தில் உறைபனி சீசன் தொடங்கி, மார்ச் முதல் வாரம் வரை நீடிக்கும். ஆனால் கடந்த ஆண்டு கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது.


தொடர் மழை, மேகமூட்டம் எதிரொலியாக உறைபனி சீசன் சற்று தாமதமாக தொடங்கியது. குறிப்பாக டிசம்பர் மாதத்தில் ஒரு சில நாட்கள் மட்டும் உறைபனி நிலவியது. ஆனால் புத்தாண்டு பிறந்தது முதல் கடந்த 5 நாட்களாக உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொடைக்கானலை உறைபனி, சிறைபிடித்து விட்டதோ என்று சொல்லும் அளவுக்கு அது ஆக்கிரமித்துள்ளது.


வாட்டி வதைக்கும் குளிர்


இந்தநிலையில் நேற்று முன்தினம் பகலில் கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் இரவில் மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவி வந்தது. நேற்று அதிகாலை 4 டிகிரி செல்சியசுக்கு குறைவாக வெப்பநிலை காணப்பட்டு கடும் குளிர் வாட்டி வதைத்தது.


புற்களின் மேல் விழுந்த நீர்ப்பனி துளிகள் உறைந்து உறைபனியாக மாறியது. மாலையில் இருந்து அதிகாலை வரை விடிய, விடிய தலையில் பனித்துளிகளை சுமந்த பசுமையான புற்கள், ஆதவனின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்ததை போல இருந்தது.


குறிப்பாக கொடைக்கானல் ஜிம்கானா, பாம்பார்புரம், அப்சர்வேட்டரி, மூஞ்சிக்கல் அரசு விளையாட்டு மைதானம், பாம்பார்புரம் உள்ளிட்ட இடங்களில் உறைபனியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது என்றே சொல்லலாம்.


விழிகளுக்கு விருந்து


வெள்ளை நிற கம்பளம் விரித்ததைபோல பசுமையான புற்களின் மேல் உறைபனி படர்ந்திருந்தது. புல்லின் நுனிப்பகுதியில் வெண்ணிற முத்துக்கள் கோர்த்ததை போல பனித்துளிகள் காட்சி அளித்தது.கொடைக்கானல் நட்சத்திர ஏரியிலும் உறைபனி ஆக்கிரமித்து கொண்டது. பகவலனின் பார்வை பட்டவுடன், அங்கு படர்ந்திருந்த பனி ஆவியாகி சென்ற காட்சி சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைத்தது.


இதேபோல் மரம், செடி, கொடிகள், இலை, தழை, புற்கள் என எந்தவித பாகுபாடின்றி திரும்பி பார்க்கும் திசையில் எல்லாம் உறைபனியின் தாண்டவத்தால் திக்குமுக்காடி கொண்டிருக்கிறது கொடைக்கானல்.


குளிரில் இருந்து தப்பிக்க...


கொடைக்கானலில் நிலவி வரும் கடும் குளிர் மற்றும் உறைபனியால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருந்து தப்பிக்கும் வகையில், அதிகாலையிலேயே ஆங்காங்கே பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தீமூட்டி குளிர் காய்ந்தனர்.


மேலும் குளிருக்கு பாதுகாப்பான சொட்டர், ஜர்க்கீன் உள்ளிட்ட ஆடைகளை அணிந்தவாறு நடமாடி வருகின்றனர். மலைப்பகுதியில் நிலவிய உறை பனியால் மேல்மலை கிராமங்களான கூக்கால், பழம்புத்தூர், மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட இடங்களில் பயிரிட்டுள்ள பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



Next Story