விளையாட்டு துறையில் சிறந்து விளங்கினால் மாணவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும்; அமைச்சர் பேச்சு


விளையாட்டு துறையில் சிறந்து விளங்கினால் மாணவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும்; அமைச்சர் பேச்சு
x

படித்தால் மட்டும் போதாது விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கினால் தான் மாணவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசினார்.

திருவண்ணாமலை

படித்தால் மட்டும் போதாது விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கினால் தான் மாணவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசினார்.

பரிசளிப்பு விழா

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மண்டலங்களுக்கு இடையிலான 19-வது தடகள போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதில் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 65-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து நேற்று மாலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளரும், உடற்கல்வி இயக்குனர் விஜயராகவன் வரவேற்றார். திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் சிறப்புரை ஆற்றினார். எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழகத்தில் ஒரு காலத்தில் ராஜஸ்தானி பல்கலைக்கழகம் மட்டுமே அரசு பல்கலைக்கழகமாக இருந்தது. அதற்கு மாற்றாக தனியார் பல்கலைக்கழகமாக அண்ணாமலை பல்கலைக்கழகம் இருந்தது. இதனால் மாணவர்களின் உயர்கல்வி என்பது எட்டாகனியாக இருந்தது. கலைஞர் ஆட்சியில் தான் மாவட்டந்தோறும் பல்கலைக்கழகங்களை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களை கொண்டு வந்தார். இதன் காரணமாக தற்போது அதிகளவில் மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகின்றனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவன் சதீஷ் சிவலிங்கம் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். துணைவேந்தர்கள் விளையாட்டுடன் சேர்ந்து படிப்பிலும் கவனம் செலுத்தி கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுமை பெண் திட்டம்

விழாவில் சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவிலேயே விளையாட்டுத் துறையில் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது உதயநிதி ஸ்டாலினை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக நியமித்து உள்ளார்.

ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற உலக அளவிலான செஸ் போட்டி நடத்தும் குழுவின் தலைவராக இருந்து உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றியுள்ளார். அதன் விளைவாகத்தான் தற்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விளையாட்டு மற்றும் கல்வி இரண்டிலும் சிறந்து விளங்க வேண்டும். விளையாட்டு துறையில் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் நான் முதல்வன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். படித்தால் மட்டும் போதாது விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கினால் தான் மாணவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

தற்போது இந்த தடகள போட்டியில் ஆண்களை விட மகளிர் தான் அதிகளவில் கலந்து கொண்டுள்ளனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஒரு காலத்தில் பெண்கள் படிக்க வருவதில்லை. ஆனால் பெண் கல்வியை உயர்த்தியது திராவிட மாடல் ஆட்சி தான். தமிழக முதல்- அமைச்சர் பெண்கள் கல்வியிலும், விளையாட்டுத்துறையிலும் வளர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தற்பொழுது புதுமை பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டின் கல்வித்தரத்தை உலக அளவில் உயர்த்தவே தற்பொழுது கல்வி குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து தற்போது வரை நாம் இருமொழி கொள்கையை கடைப்பிடித்து வருகிறோம். ஆனால் மத்திய அரசு புதிய கல்வித் திட்டம் என்ற பெயரில் சமஸ்கிருதம் மற்றும் இந்தியை கட்டாய பாடமாக்கி திணிக்க நினைக்கின்றது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.

சாம்பியன் பட்டம்

விரைவில் 234 தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்களை அமைத்து ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு விளையாட்டுகளில் மாணவர்கள் அதிக அளவில் பதக்கங்களை குவிக்க ஊக்குவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தடகளப் போட்டியில் ஆண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி மாணவர்கள் பெற்றனர். வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 2-ம் இடத்தையும், ஏலகிரி டான்பாஸ்கோ கல்லூரி மாணவர்கள் 3-ம் இடத்தையும் பிடித்தனர். அதேபோல் பெண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் பெற்றனர். திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி மாணவிகள் 2-ம் இடமும், வாணியம்பாடி எம்.கே. ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகள் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

மேலும் ஆண்கள் தனிநபர் சாம்பியன் பட்டத்தை முத்துரங்கம் கல்லூரி மாணவர் லோகேஷ், தூய நெஞ்சக் கல்லூரி அபிஷேக் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். பெண்களுக்கான சாம்பியன் பட்டத்தை வேலூர் ஆக்சீலியம் கல்லூரி மாணவி சித்ரா, கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி மாணவி ரம்யா, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவி சுபலட்சுமி ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.

விழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழக அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.


Next Story