அத்துமீறி நுழைந்து கடைகளின் பூட்டை உடைத்த கும்பல்
நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டில் ஒரு கும்பல் அத்துமீறி நுழைந்து கடைகளின் பூட்டை உடைத்தது. இதனால் வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டில் ஒரு கும்பல் அத்துமீறி நுழைந்து கடைகளின் பூட்டை உடைத்தது. இதனால் வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உள்வாடகைக்கு விட்டனர்
நாகர்கோவில் ஒழுகினசேரி அருகே அப்டா (விவசாய விளைபொருள் உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகள் சங்கம்) மார்க்கெட் என்ற பெயரில் தனியார் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இரணியல் அருகே உள்ள பேயன்குழி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் நான்கு கடைகளை வாடகைக்கு எடுத்திருந்தார். அந்த கடையில் டீ கடை மற்றும் ஓட்டல் நடத்தி வந்தார். இந்த நிலையில் அவர் அந்த கடையை வேறு நபருக்கு உள்வாடகைக்கு விட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் அப்பா மார்க்கெட் நிர்வாகத்திற்கு தெரிய வந்தது. உடனே நிர்வாகிகள் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து கோட்டார் போலீசில் அப்பா மார்க்கெட் நிர்வாகிகள் புகார் செய்தனர். இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
மீண்டும் பூட்டு
இந்த நிலையில் அப்டா மார்க்கெட் நிர்வாகம் சார்பில் பூட்டப்பட்ட கடையை உடைத்து ஒரு கும்பல் நேற்று காலை உள்ளே புகுந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் அப்டா மார்க்கெட் நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் ஏராளமானோர் அந்த கடைகள் முன்பு திரண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து அப்டா மார்க்கெட் சங்கத் தலைவர் பால்ராஜ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் பூட்டு உடைக்கப்பட்ட கடைகளை அப்டா மார்க்கெட் நிர்வாகிகள், வியாபாரிகள் மீண்டும் தங்கள் வசப்படுத்தி பூட்டினர்.
விசாரணை
இதுகுறித்து அப்டாமார்க்கெட் சங்க தலைவர் பால்ராஜ் கூறியதாவது:-
அப்டா மார்க்கெட்டில் உள்ள கடையை வாடகை எடுத்தவர் தங்களுக்கு கடை வேண்டாம் என்றால் நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும். நிர்வாகம்தான் கடையை வேறு நபர்களுக்கு வழங்குவது தொடர்பாக முடிவு செய்யும். சம்பந்தப்பட்ட 4 கடைகளை வாடகைக்கு எடுத்திருந்தவர்களுக்கு வாடகை ஒப்பந்த பத்திரம் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த ஒப்பந்த பத்திரத்தை மீறி மறு நபருக்கு கடையை உள் வாடகைக்கு கொடுத்திருந்தனர். இப்படி எங்களை ஏமாற்றிய விவரம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தெரிய வந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் நாங்கள் கடையை வாடகைக்கு எடுத்திருந்த 2 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி அந்த கடைகளை நாங்கள் கையகப்படுத்தினோம். மேலும் எங்களுக்கு அவர்கள் மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக கோட்டார் போலீசிலும் புகார் செய்துள்ளோம்.
இந்த நிலையில் ஒரு கும்பல் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். வியாபாரிகள் அனைவரும் கூடியதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். அந்த கடைகளுக்கு பூட்டு போட்டு பூட்டியுள்ளோம். கடையை உடைத்ததற்கான கண்காணிப்பு கேமரா காட்சி ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. கடையை உடைத்தது தொடர்பாக கோட்டார் போலீசில் கண்டால் தெரியும் 5 பேர் உள்பட 9 பேர் மீது புகார் செய்துள்ளோம். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கூடுதல் சூப்பிரண்டை சந்தித்தும் புகார் கூறியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனால் அப்டா மார்க்கெட் காலையில் இருந்து மதியம் வரை பரபரப்புடன் காணப்பட்டது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.