இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை


இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை
x

சங்கராபுரம் அருகே இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை தீ வைத்து எரித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே குளத்தூர் திருவண்ணாமலை-திருக்கோவிலூர் பிரிவு சாலை அருகில் உள்ள சித்தேரியில் பாதி உடல் எரிந்த நிலையில் சுமார் 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே சங்கராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கொலை

அப்போது இறந்த பெண்ணின் கழுத்தில் வெட்டு காயம் இருந்தது. மேலும் முகத்தின் ஒரு பகுதி எரிந்த நிலையில் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதன் மூலம் அந்த பெண்ணின் கழுத்தை மர்மநபர்கள் அறுத்து கொலை செய்துவிட்டு தடயங்களை அழிப்பதற்காக உடலை தீ வைத்து எரித்ததும் தெரிந்தது.

மேலும் கொலை செய்யும் போது சத்தம்போடாமல் இருப்பதற்காக இளம்பெண்ணின் வாயில் துணியை வைத்து அடைத்ததும் தெரியவந்தது.

தடயங்கள் சேகரிப்பு

இருப்பினும் கொலை செய்யப்பட்ட இளம் பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது பற்றிய எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து தடயவியல் நிபுணர் ஷர்மிளா, கைரேகை நிபுணர் ஜெய்சங்கர், சைபர் கிரைம் சிவராமன் ஆகியோர் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் மோப்பநாய் மிஸ்டி வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தப்படி குளத்தூர் பஸ் நிறுத்தம் வரை ஓடி நின்றது. இருப்பினும் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

தனிப்படை அமைப்பு

பின்னர் இளம்பெண் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், பாலகிருஷ்ணன், பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராசு, திருமால் ஆகியோர் கொண்ட தனிப்படையை அமைத்து உத்தரவிட்டார்.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பெண்ணின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண் யார்?, உல்லாசத்திற்கு அழைத்து வந்து அதன் பின்னர் ஏற்பட்ட தகராறில் அவரை மர்மநபர்கள் கொலை செய்து எரித்தார்களா?, அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story