அனைத்து வீடுகளிலும் மாடித்தோட்டம் அமைக்க இலக்கு


அனைத்து வீடுகளிலும் மாடித்தோட்டம் அமைக்க இலக்கு
x
தினத்தந்தி 4 May 2023 6:45 PM GMT (Updated: 4 May 2023 6:46 PM GMT)

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ஓராண்டுக்குள் அனைத்ஞது வீடுகளிலும் மாடித்தோட்டம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நகர சபை தலைவர் கூறினார்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ஓராண்டுக்குள் அனைத்ஞது வீடுகளிலும் மாடித்தோட்டம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நகர சபை தலைவர் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் உள்ள மாடி வீடுகளில் இயற்கை முறையில் சத்தான காய்கறி தோட்டம் அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், தலைமையில நடந்தது., ஆணையர் பிரதான் பாபு, பாலம் சேவை நிறுவனச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இயற்கை காய்கறி தோட்ட வல்லுனர் திருச்சி விதை யோகநாதன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இளவரசன் ஆகியோர் மாடித் தோட்டம் அமைப்பது குறித்து விளக்கி கூறினர்.

மாடி தோட்டம்

நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பேசும் போது கூறியதாவது:- காலநிலை மாற்றத்தினால் சூரியவெப்பம் அதிகரித்து வருகிறது, கூரை வீடு முதல் மாடி வீடுகளில் வசிப்பவர்கள் வரை வெப்பத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வீட்டின் மேல்பகுதியை குளிரவைக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், பசுமைகுடில் சிறந்தது. மேலும் நாம் உண்ணும் உணவும், காய்கறி, பழங்கள், கீரைகளில் ரசாயன பூச்சிகொல்லிகளும், உரங்களும் பயன்படுத்துவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.

இதை தடுக்க வீட்டின் மாடி பகுதிகளில் குறைந்த செலவில் தோட்டம் அமைத்து இயற்கை உரங்களை பயன்படுத்தி பாரம்பரிய நாட்டு காய்கறி, பழங்கள், கீரைகள், கிழங்குகள் மூலிகைகளை உற்பத்தி செய்யலாம். இதற்கு தண்ணீர் தேவை குறைவு, நஞ்சில்லாத உணவு, நோயற்ற வாழ்வு, பொருளாதார சேமிப்பு போன்ற நன்மைகள் கிடைக்கிறது.

காய்கறி விதைகள் வழங்கப்படும்

இதற்காக நகராட்சி நிர்வாகத்துடன் பாலம் சேவை நிறுவனம், பசுமை சிகரம் அமைப்பு இணைந்து உரிய தொழில்நுட்பங்கள் குறித்து ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். காய்கறி, விதைகள் வழங்கப்படும்.

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ஓராண்டுக்குள் அனைத்து மாடி வீடுகளிலும் மாடித்தோட்டம் அமைப்பதே இலக்கு. இவ்வாறு அவர் கூறினார். இதில் நகர்மன்ற உறுப்பினர் எழிலரசன் கலந்துக்கொண்டார்.


Next Story