சாலை பக்கவாட்டில் அரசு பஸ் இறங்கியதால் பரபரப்பு

சாலை பக்கவாட்டில் அரசு பஸ் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வால்பாறை,
வால்பாறையில் இருந்து முடீஸ் பகுதிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில், அகலப்படுத்தப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. சாலை மிகவும் உயரமாக அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், சாலையின் இருபுறத்திலும் சாலை அகலப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலை உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் முடீஸ் பஸ் நிலையத்தில் இருந்து வால்பாறையை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. முடீஸ் தொலைபேசி நிலையம் அருகே சென்ற போது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்ட சமயத்தில் அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கி சாய்ந்தது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். இருப்பினும், பஸ் கவிழாமல் நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனவே, முடீஸ் பகுதியில் சாலையின் இருபுறமும் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு பஸ் டிரைவர்கள், தனியார் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






