வீட்டின் மீது மோதிய அரசு பஸ்


வீட்டின் மீது மோதிய அரசு பஸ்
x

வீட்டின் மீது அரசு பஸ் மோதியது.

அரியலூர்

மீன்சுருட்டி:

நாய் துரத்தியது

அரியலூர் மாவட்டம், குருவாலப்பர் கோவில் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் தமிழரசி (வயது 10). இவள் அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளி செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்ட தமிழரசி நெடுஞ்சாலை ஓரமாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று தமிழரசியை கடிக்க துரத்தியதாக தெரிகிறது.

அதேநேரத்தில் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு மீன்சுருட்டி வழியாக காட்டுமன்னார்குடி நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை குருவாலப்பர் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த தங்கதுரை(52) ஓட்டினார். ஆண்டிமடம் அருகே உள்ள கோவில்வாழ்க்கை கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி(47) கண்டக்டராகஇருந்தார்.

வீட்டின் மீது மோதல்

குருவாலப்பர்கோவில் பஸ் நிறுத்தம் அருகே அந்த பஸ் வந்தது. அப்போது நாய் துரத்தியதால் ஓடி வந்த தமிழரசி திடீரென நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடினார். இதைக்கண்ட டிரைவர் தங்கதுரை உடனடியாக சுதாரித்துக்கொண்டு, தமிழரசியின் மீது மோதாமல் இருக்க பஸ்சை சாலையின் ஓரமாக திருப்பினார். இதில் சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் மோதிய பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. மேலும் டிரைவர் தங்கதுரை, தனது இருக்கையில் இருந்து தவறி கீழே விழுந்தார். தொடர்ந்து ஓடிய அந்த பஸ் அருகில் இருந்த முத்துக்கிருஷ்ணன் என்பவரது வீட்டின் சுவற்றில் மோதி நின்றது.

டிரைவரின் சாமர்த்தியம்

இந்த சம்பவத்தில் வீட்டின் சுவர் சேதமடைந்தது. இருப்பினும் மாணவி தமிழரசி மற்றும் பயணிகள் உள்ளிட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் சாமர்த்தியமாக செயல்பட்டு உயிர் சேதத்தை தவிர்த்த டிரைவர் தங்கராஜை பொதுமக்கள் பாராட்டினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story