பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ்; டிரைவர் உள்பட 6 பேர் காயம்
பள்ளத்தில் அரசு பஸ் இறங்கியதில் டிரைவர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை அரசு டவுன் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றுக்கொண்டு விராலிமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் பகல் 12 மணியளவில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் ஆசாபுரம் கட்ரோடு அருகே சென்றபோது, முன்னால் இனாம்குளத்தூரை சேர்ந்த வரதராஜன் (வயது 32) என்பவர் ஓட்டிச் சென்ற காலி கியாஸ் சிலிண்டர் லாரி, கட்ரோட்டில் திரும்பி வலது புறம் செல்வதற்காக திடீரென வேகம் குறைந்து மெதுவாக சென்றது. இதை எதிர்பார்க்காத பஸ் டிரைவர், லாரி மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை இடதுபுறம் வேகமாக திருப்பியுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் இறங்கி சாய்ந்த நிலையில் நின்றது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் ஐயோ... அம்மா... என்று கூச்சலிட்டனர்.
இந்த விபத்தில் அந்த பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவர் விராலிமலை வேலங்குறிச்சியை சேர்ந்த ராஜமாணிக்கம் (53) மற்றும் பயணிகள் விராலிமலை கோவில்காட்டுப்பட்டி அஞ்சலை (50), எடமலைப்பட்டிபுதூர் அமிர்தம் (50), விராலிமலை ஜெயமங்களம் சின்னபொண்ணு (47), மணிகண்டம் வடக்குத்தெரு தங்கம்மாள் (54), திருச்சி போதாவூர் பழனிவேல் மகள் லலிதா (21) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த மணிகண்டம் போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் அங்கு வந்து டிரைவர் உள்ளிட்ட 6 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற பயணிகள் வேறு பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.