வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்
நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் ரகுபதி கூறினார்.
நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் ரகுபதி கூறினார்.
புதிய கட்டிடங்கள்
நாகை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். தமிழக மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
விழாவில் அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு, நாகை ஒன்றியம் புதுச்சேரியில் ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பில் ரேஷன் கடை கட்டிடம், வடுகச்சேரி ஊராட்சியில் ரூ.11 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.
அமைச்சர் திறந்துவைத்தார்
செம்பியன்மகாதேவி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட ரூ.11 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான அங்கன்வாடி கட்டிடம் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பிலான கோட்டூர் பயணிகள் நிழலகம், மாதானம் ஊராட்சியில் ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன்கடை என மொத்தம் ரூ.58 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அரசு கட்டிடங்களை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழு தலைவர் அனுசியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வுக்கூட்டம்
முன்னதாக நாகை கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக 5 ஆயிரம் மணல் மூட்டைகள், 20 யூனிட் மணல், 1,250 சவுக்குகட்டைகள் உள்ளிட்டவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தயார் நிலையில் உள்ளது
மேலும் இயற்கை பேரிடரின் போது மக்களை அவசர காலங்களில் தங்க வைப்பதற்காக 83 திருமண மண்டபங்கள், 145 பள்ளிக்கூடங்கள், சமுதாய கூடங்கள் உள்ளிட்டவை கழிவறை, சுகாதார வசதிகளுடன், வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. தி.மு.க. கூட்டணியுடன் மத்திய அரசு அமையும் போது தமிழக மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என்றார். தொடர்ந்து லியோ படம் தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.