சுதந்திர போராட்ட தியாகி வாரிசுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்-கலெக்டரிடம் மனு
சுதந்திர போராட்ட தியாகி வாரிசுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மேலத்திடீயூரை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி மறைந்த ராமையாவின் மகன் சண்முகவேல் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், எனது தந்தை சுதந்திர போராட்ட தியாகி மறைந்த ராமையா டெல்லியில் நடந்த சுதந்திர பொன்விழாவில் பாராட்டு சான்று பெற்றார். நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம். எனது மகன் தங்கராஜா எம்.பி.ஏ. படித்துள்ளார். அவருக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆடி அமாவாசையன்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும். திருவிழா முடியும் வரை வழக்கம்போல் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் மனு கொடுத்தார்.
நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி தொலைபேசி எண் ஒரு மாதமாக செயல்படவில்லை. இதை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறி பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி மனு கொடுத்தார்.
சவுதி அரேபியாவில் பணியாற்றிய போது மரணம் அடைந்த பேச்சிமுத்து குடும்பத்திற்கு ரூ.22 லட்சத்து 57 ஆயிரத்து 336 நிதி உதவியை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.