தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அரசு மீண்டும் தொடர வேண்டும்


தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அரசு மீண்டும் தொடர வேண்டும்
x

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அரசு மீண்டும் தொடர வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை அமைப்பான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 8-வது மாவட்ட மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநாட்டில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும். தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாநில தலைவர் வாலண்டினா, நிருபர்களிடம் கூறுகையில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஏழை பெண்களுக்கான கல்வி உதவித்தொகையாக ரூ.ஆயிரம் வழங்கும் திட்டம் சிறப்பான திட்டம். ஏற்கனவே இருந்ததுபோல் படித்த பெண்களுக்கு திருமணத்தின்போது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த தாலிக்கு தங்கம் மற்றும் கல்வி தகுதிக்கு உரிய திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடர வேண்டும். புதிதாக முதல்-அமைச்சர் அறிவித்துள்ள கல்வி உதவித்தொகை திட்டமும் தொடர வேண்டும். இது ஏழை, எளிய குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளின் திருமணத்தின்போது மிகுந்த உதவியாக இருக்கும். எனவே தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியதை அரசு திரும்பப்பெற வேண்டும், என்றார்.

இதைத்தொடர்ந்து தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் மாதர் சங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் பாக்கியம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராணி, சசிகலா, மாநிலத் துணைச் செயலாளர் கீதா, மாவட்ட செயலாளர் பத்மாவதி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story