ஜனநாயகத்துக்கு எதிரான வன்முறையை கவர்னர் செய்து வருகிறார் முத்தரசன் பேட்டி
ஜனநாயகத்துக்கு எதிரான வன்முறையை கவர்னர் செய்து வருகிறார் என்று திருச்சியில் முத்தரசன் கூறினார்.
ஜனநாயகத்துக்கு எதிரான வன்முறையை கவர்னர் செய்து வருகிறார் என்று திருச்சியில் முத்தரசன் கூறினார்.
நடை பயண இயக்கம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் பா.ஜனதாவை அகற்றி நாட்டை காப்போம், மாற்றத்தை நோக்கி என்ற தலைப்பில் நடைபயண இயக்க தொடக்க விழா உறையூர் குறத்தெரு பகுதியில் நேற்று காலை நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு நடைபயண இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், கம்யூனிஸ்டு கட்சியினர் தைரியமாக பா.ஜனதா அரசை அகற்றுவோம் என எதிர்த்து வருகிறார்கள். மேற்கு தொகுதியில் 6 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் இயக்கத்தை நடத்துகிறார்கள். இந்த நடைபயண இயக்கத்துக்கு தி.மு.க. துணை நிற்கும், என்றார்.
இதனைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
களங்கம்
கவர்னர் ரவி ஏற்று இருக்கிற பொறுப்பு கண்ணியமானது. அந்த கண்ணியத்துக்கு களங்கம் ஏற்படும் வகையில் அவருடைய செயல்பாடு இருக்கிறது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கவர்னர் உரையில் இருந்தது அனைத்தும் பொய் என கூறி உள்ளார். அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட அந்த உரை கவர்னருக்கு அனுப்பப்பட்டு அவர் ஒப்புதல் அளித்தபிறகு தான் அச்சிடப்படும். அந்த உரையின் மீது கருத்துக்கூறக்கூடியவர் கவர்னர் அல்ல. அது சட்டப்பேரவை உறுப்பினர்களின் உரிமை. அப்படி இருக்கையில் அந்த உரையில் இருந்த அனைத்தும் தவறு என அவர் கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படும் கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்து, அவரை மத்திய அரசு கைது செய்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு யோக்கியமற்ற அரசாக இருப்பதால் அதனை அவர்கள் செய்ய மறுக்கிறார்கள்.
ஜனநாயகத்துக்கு எதிரான வன்முறை
ஜனநாயகம் என்கிற பெயரால் ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறைகளை கவர்னர் செய்துவருகிறார். கவர்னர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏற்கனவே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி எம்.பி.க்களின் சார்பில் ஜனாதிபதிக்கு புகார் மனு அனுப்பினார்கள். ஆனால் அது குறித்து விசாரணை செய்யாத காரணத்தால் தொடர்ந்து இதுபோல் அவர் பேசி வருகிறார். பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்ற காரணத்தால் அவர் பேசி கொண்டு இருக்கிறார்.
ஒரு மசோதாவை நிறைவேற்றியபிறகு எந்த அரசும் அதை உடனடியாக திரும்ப பெறாது. ஆனால் தொழிலாளர் வேலை நேர சட்டத்தை நிறைவேற்றி அதை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற்று இருப்பது சிறந்த ஜனநாயக அரசு என்பதை காட்டுகிறது. கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் அபத்தமானது. மக்களிடையே மோதலை ஏற்படுத்தக்கூடியது. ஒரு சிலர் மக்களிடையே மோதலை ஏற்படுத்த வேண்டும் என செயல்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
நடைபயண இயக்கம் வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.