நீட் தேர்வு மசோதாவுக்குகவர்னர் ஒப்புதல் அவசியம் இல்லை; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


நீட் தேர்வு மசோதாவுக்குகவர்னர் ஒப்புதல் அவசியம் இல்லை; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அவசியம் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தென்காசி

நீட் தேர்வு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அவசியம் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

நடைபயிற்சியில் ஈடுபட்ட அமைச்சர்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை 7.30 மணியளவில் தென்காசி மேலகரம் மின்நகர் பகுதியில் காசிமேஜர்புரம் வரையிலும் நடைப்பயிற்சி செய்துவிட்டு திரும்பி வந்தார். சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவருடன் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றனர்.

பின்னர் தென்காசி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் ரூ.60 லட்சத்தில் கூடுதல் கண் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் ரூ.15 லட்சத்தில் ஓமியோபதி பிரிவு கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் ஆலங்குளத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் ஆலங்குளம் அருகே நெட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் உள்ள இசையமைப்பாளர் பரத்வாஜ் இ்ல்லத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்றார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வு விலக்கு மசோதா

நீட் தேர்வு விலக்கு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதனை கவர்னர் பல்வேறு விளக்கங்கள் கேட்டு திருப்பி அனுப்பினார். அதுகுறித்து சட்ட வல்லுனர்களிடம் கலந்து பேசி, மீண்டும் விளக்கம் அளித்து கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார். அத்துடன் அவரது பணி முடிவடைந்துவிட்டது.

தற்போதும் அந்த மசோதாவுக்கு உயிரோட்டம் உள்ளது. இப்போது அந்த மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன் என்று கவர்னர் கூறுவது அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதல்ல. நீட் தேர்வுக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இனி அதுதொடர்பாக அவரிடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை. ஜனாதிபதி அந்த மசோதாவை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளார். அவர்களும் பல்வேறு விளக்கங்கள் கேட்டு, அதற்கும் பதில் அனுப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசு எப்போது அனுமதி அளித்தாலும் தமிழகத்தில் முதலாவதாக தென்காசியில் மருத்துவக்கல்லூரி அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story