இரவு நேரத்தில் அதிக வெளிச்சத்துடன் செல்லும் வாகனங்கள்

இரவு நேரத்தில் அதிக வெளிச்சத்துடன் செல்லும் வாகனங்கள்
முத்தூர்
முத்தூர் -காங்கயம் சாலையில் இரவு நேரங்களில் முகப்பு மின் விளக்குகளில் அதிக வெளிச்சத்தை உமிழ்ந்து செல்லும் வாகனங்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.
கனரக வாகன போக்குவரத்து
திருப்பூர் மாவட்டம் முத்தூர் - காங்கயம் பிரதான மாவட்ட நெடுஞ்சாலையில் தினந்தோறும் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இவ்வழியே கோவை, வாளையார் வழியாக கேரளா மாநிலம் பாலக்காடு, குருவாயூர் மற்றும் திருப்பூர், அன்னூர், உட்பட பல்வேறு நகரங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இதன்படி இந்த சாலையில் அரசு டவுன் பஸ்கள் தவிர மற்ற நீண்ட தூரங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் சுமார் 100 கிலோ மீட்டரை தாண்டி அதிக வேகத்தில் சென்று வருகின்றன. மேலும் மோட்டார் சைக்கிள், மொபட் உட்பட சிறிய இரு சக்கர வாகனங்கள் சுமார் 50 கிலோ மீட்டரை தாண்டி சென்று வருகின்றன. இதில் தற்கால சூழ்நிலைக்கேற்ப நவீன வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டு உள்ள மோட்டார் சைக்கிள்கள் சுமார் 120 கிலோ மீட்டரை தாண்டி வேகமாக சென்று வருகின்றன.
மின் விளக்குகளில் வெளிச்சம்
இந்த நிலையில் இந்த சாலையில் செல்லு ஒரு சில கார் உட்பட பல்வேறு கனரக வாகனங்களில் அதிக வெளிச்சத்தை உமிழும் திறன் வாய்ந்த மின் விளக்குகள் முகப்புகளில் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் குறிப்பிடும் படியாக கார்கள் மட்டும்தான் முகப்புகளில் அதிக மின் வெளிச்சத்தை சாலையில் நீண்ட தூரத்திற்கு ஒளி வெளிச்சத்தை வீசியபடி சர்வ சாதாரணமாக சென்று வருகின்றன.
இதுபோன்ற கார்கள் இந்த சாலையில் இரவு நேரங்களில் அதிக வெளிச்சத்தை உமிழ்ந்தவாறு செல்வதால் எதிரே இருசக்கர வாகனங்களில் வருபவர்களின் கண்களில் ஒளி கதிர்கள் நேரடியாக பட்டு கூசுவதால் தொடர்ந்து இயல்பாக வாகனத்தை செலுத்த முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர்.
விபத்து அபாயம்
மேலும் கார்களில் வருபவர்கள் எதிரே வரும் இருசக்கர வாகனங்களை பொருட்படுத்தாமல் முகப்புகளில் அதிக வெளிச்சத்தை மின்விளக்குகளில் மேலே கண்களில் வீசும் அளவிற்கு உமிழ்ந்து வாகனங்களை இயக்கி சென்று வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அதிகாரிகள் குழுவினர் மூலம் இரவு நேரங்களில் முத்தூர் - காங்கயம் சாலையில் செல்லும் கார்கள் உட்பட அனைத்து கனரக வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்து அதிக வெளிச்சத்தை உமிழ்ந்து செல்லும் கனரக வாகனங்கள் மீதும் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இருசக்கர வாகன ஓட்டிகள், நகர, கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.