மாணவியை விமானத்தில் அழைத்து சென்று மகிழ்வித்த தலைமை ஆசிரியை


மாணவியை விமானத்தில் அழைத்து சென்று மகிழ்வித்த தலைமை ஆசிரியை
x
தினத்தந்தி 17 Jun 2023 12:36 AM IST (Updated: 17 Jun 2023 11:20 AM IST)
t-max-icont-min-icon

மாணவியை விமானத்தில் அழைத்து சென்று தலைமை ஆசிரியை மகிழ்வித்தார்.

அரியலூர்

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வானவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மொத்தம் 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசின் சார்பில் தேசிய திறனறி தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் எழுதினர். இந்த மையத்தில் வானவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 8 பேர் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு விமான பயணத்தை பரிசாக வழங்குவதாக, ஏற்கனவே அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா கூறி, மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தியிருந்தார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் ஆசிரியர்களும் பயிற்சி அளித்துள்ளனர்.

இந்நிலையில் திறனறி தேர்வு முடிவு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இதில் அந்த நடுநிலைப்பள்ளி மாணவி மிருணாளினி தேர்ச்சி பெற்றார். இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியை கூறியபடி, மாணவி மிருணாளினி விமானத்தில் பயணம் மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை செய்தார். அதன்படி நேற்று முன்தினம் அவர், மாணவி மிருணாளினியை திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் அவர்கள் சென்னைக்கு சென்றனர். அந்த மாணவி மகிழ்ச்சியுடன் விமானத்தில் பயணம் செய்தார். திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை தலைமை ஆசிரியை விமானத்தில் பயணம் செய்ய வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story