சாலையில் அமர்ந்து மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்
வன கிராமங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு மலைவாழ் மக்கள் சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி
வன கிராமங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு மலைவாழ் மக்கள் சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய வனச்சரக பகுதிகளில் உள்ள 18 வனக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை மனு அளித்தும், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. எனவே போர்க்கால அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று மலைவாழ் மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். இதையடுத்து போலீசார் தடுப்புகளை வைத்து உள்ளே விடாமல் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சப்-கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதை தொடர்ந்து சிலர் மட்டும் சப்-கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் சப்-கலெக்டர் பிரியங்காவிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தொகுப்பு வீடுகள், பொதுக்கழிப்பிடம்
பழங்குடியின மக்களின் வீடுகள் முழுவதும் பாதுகாப்பு இல்லாமல் மூங்கில் கொண்டு சுற்றிலும் மறைக்கப்பட்டு உள்ளன. இதனால் மழைக்காலங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அனைத்து மலைக்கிராமங்களிலும் தரமான தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். மலைவாழ் மக்களின் வீடுகளின் முன்பு மின்சார ஓயர்கள் சென்றும், மின்சார வசதி இல்லாத நிலை உள்ளது. எனவே அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும். வனத்துறை மூலம் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு குழு பெயரால் வருமானம் ஈட்டும் தொகையை அவர்களின் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள பயன்படுத்த வேண்டும். தற்காலிக பணியாளர்களுக்கு வனத்துறை மூலம் சம்பளம் வழங்க வேண்டும்.
பழுதடைந்த தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். மேலும் கழிப்பிட வசதி இல்லாததால் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். எனவே சுகாதாரத்தை பேணும் வகையில் கிராமங்கள்தோறும் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். பழங்குடியின மக்களுக்கு நலவாரிய அட்டை வழங்க வேண்டும். பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கான கறவை மாடுகள் வழங்குதல் போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படும்
இதை தொடர்ந்து சப்-கலெக்டர் பிரியங்கா கூறுகையில், பழங்குடியின கிராமங்களில் பொது கழிப்பிடம், தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனுபவ நில பட்டா கேட்டு விண்ணப்பித்த சிலருக்கு நிராகரிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்யப்படும். மின் இணைப்பு கொடுக்க மத்திய அரசின் அனுமதிக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. கோரிக்கைகள் மீது உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பத்மநாபன், தாலுகா செயலாளர் பரமசிவம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.