மழைக்கு வீட்டுச்சுவர் இடிந்தது; தம்பதி தப்பினர் பாலத்தின் அடியில் சிக்கிய சுற்றுலா பஸ் மீட்பு
சோழவந்தானில் மழைக்கு வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக தம்பதி உயிர் தப்பினர். மதுரையில் பாலத்தின் அடியில் சிக்கிய சுற்றுலா பஸ் மீட்கப்பட்டது.
சோழவந்தான்
வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. சோழவந்தான் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சோழவந்தான் ஆர்.சி. பள்ளி எதிரில் உள்ள வண்ணான் தெருைவ சேர்ந்தவர் யோசனை(வயது 60), அவரது மனைவி சித்ரா(55) ஆகியோர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தனர். அப்போது நள்ளிரவு 12 மணியளவில் மழைக்கு அவர்களது வீட்டின் சுவர் வெளிப்புறமாக விழுந்தது. இதனால் வீட்டுக்குள் இருந்த தம்பதிகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனடியாக அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து மின்இணைப்பையும் துண்டித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வார்டு கவுன்சிலர் நிஷா கவுதமராஜா பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதே போல் குருவித்துறை கிழக்குத்தெருவில் உள்ள காளிமுத்து என்பவருடைய வீட்டின் கிழக்கு பக்க சுவர் இடிந்து விழுந்தது.வருவாய் ஆய்வாளர் சதீஷ் சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட காளிமுத்துக்கு ஆறுதல் கூறி நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.
சுற்றுலா பஸ் சிக்கியது
கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் மதுரைக்கு நேற்று முன்தினம் ஆன்மிக சுற்றுலா வந்தனர். அப்போது பலத்த மழை பெய்ததால் அந்த சுற்றுலா பஸ் மணிநகரம் கருடர் பாலத்தின் கீழ் சென்ற போது மழைநீரில் சிக்கி கொண்டது. பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதை தொடர்ந்து பாலத்தின் தண்ணீர் வடிந்த பின்னர் அந்த பஸ்சை நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் மீட்டனர். அதன்பின்னர் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.