கணவன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
திருக்கோவிலூர் அருகே துணிகர சம்பவம் கணவன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள காங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 35). இவர் நேற்று அவரது மனைவி செவ்வந்தியுடன் மோட்டார் சைக்கிளில் மணலூர்பேட்டை-தியாகதுருகம் சாலையில் சென்று கொண்டிருந்தார். கூவனூர் கிராம எல்லையில் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென முந்தி சென்று கார்த்திகேயனின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மேட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் அந்த மர்ம நபர்களில் ஒருவன் கார்த்திகேயன் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போடாமல் உன்னிடம் இருக்கும் பணம் மற்றும் பொருளை கொடுத்து விடு என மிரட்டினான். இதனால் பயந்து போன செவ்வந்தி வேறு வழியின்றி தனது கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க சங்கிலியை கழற்றி கொடுத்தார். உடனே அதை வாங்கிக்கொண்ட மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் வாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து கணவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.