'இந்தியா' கூட்டணி தேர்தல் வரை நிலைக்காது; திருச்சியில் வானதி சீனிவாசன் பேட்டி
‘இந்தியா’ கூட்டணி தேர்தல் வரை நிலைக்காது என்று திருச்சியில் வானதி சீனிவாசன் கூறினார்.
மாநில செயற்குழு கூட்டம்
பாரதீய ஜனதா கட்சியின் மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மகளிர் அணி மாநில தலைவர் உமாரதிராஜன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் புவனேஸ்வரி வரவேற்று பேசினார். மாநில செயலாளர்கள் குயிலி, ஜீவஜோதி, பொதுச்செயலாளர்கள் நதியா, மோகனபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பா.ஜ.க. மாநில செயலாளர் கருப்புமுருகானந்தம், மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முடிவில் திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவர் ரேகா நன்றி கூறினார். திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் மலர்கொடி உள்ளிட்ட அனைத்து மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
10 கோடி கியாஸ் இணைப்பு
நாடு முழுவதும் மகளிர் அணியின் பணிகளை வேகப்படுத்தி வருகிறோம். மத்திய அரசின் 15 முக்கிய திட்டங்களை பற்றி மகளிர் அணி சார்பாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அவர்கள், தங்களை சுற்றி உள்ளவர்களுக்கு அந்த திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி வருகிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சி முடிவில் இருந்த கியாஸ் இணைப்பை விட கூடுதலாக 10 கோடி ஏழைப்பெண்களுக்கு கியாஸ் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியில் கியாஸ் சிலிண்டர் விலையை குறைப்பதாக கூறவில்லை. ஆனால் ஏழைப்பெண்கள் நலன் கருதி விலையை குறைத்துள்ளார்.
இந்தியா கூட்டணி நிலைக்காது
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தருவதாக கூறியநிலையில், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆனபின்பும் எதுவும் செய்யவில்லை. அவர்கள் இந்த அறிவிப்பு குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. குடும்ப ஆட்சி நடத்துகிற, ஊழல் கறை படிந்த அத்தனை பேரும் ஒரே மேடையில் அமர்ந்து, நேர்மையாக திறமையாக ஆட்சி நடத்தும் பிரதமருக்கு எதிராக கூட்டணி ('இந்தியா' கூட்டணி) அமைத்திருக்கிறார்கள்.
இந்த கூட்டணியை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை. தேர்தல் வரை 'இந்தியா' கூட்டணி நிலைக்காது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதால் நன்மை என்ன?, தீமை என்ன?, சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும். தேர்தல் சீர்திருத்தம் என்பது இந்நாட்டிற்கு மிக அவசியம். தமிழ்நாட்டில் மோடி போட்டியிட வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம், மக்களும் விரும்புகிறார்கள். ஆனால் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, காத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.