அறிவுசார் மைய பணிகளை 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும்


அறிவுசார் மைய பணிகளை 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும்
x

வேலூரை அடுத்த அரியூரில் ரூ.2½ கோடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையப்பணிகளை 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா அறிவுறுத்தினார்.

வேலூர்

அறிவுசார் மையம்

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கால்வாய், சாலை அமைத்தல், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்காக 58-வது வார்டுக்கு உட்பட்ட அரியூரில் ரூ.2½ கோடி மதிப்பில் நவீன முறையில் அறிவுசார் மையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று அறிவுசார் மைய கட்டிடப்பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும்

அப்போது அவர், அங்கு நடைபெற்று வரும் கட்டிடம் மற்றும் இதர பணிகள் குறித்தும், இப்பணியை முடிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் பற்றியும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அறிவுசார் மைய கட்டிடப்பணிகள் தரமாக கட்டப்பட்டுள்ளதா என்று நகராட்சி நிர்வாக இயக்குனர் பார்வையிட்டார். பின்னர் அவர் அறிவுசார் மையத்தின் அனைத்து பணிகளையும் 2 மாதத்துக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்ததாரர், மாநகராட்சி அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா 60-வது வார்டு இடையன்சாத்து பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது வேலூர் மாநகராட்சி கமிஷனர்கள் ரத்தினசாமி, அசோக்குமார், மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி கமிஷனர் செந்தில்குமரன், இளநிலை பொறியாளர் செல்வராஜ், சுகாதார அலுவலர் முருகன், கவுன்சிலர் கணேஷ் சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story